”நானே ஃபீல்ட் அவுட் ஆனாலும்..” அனிருத் பேச்சால் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்.. அதிர்ந்த அரங்கம்!
இயக்குநர் ஏஆர் முருகதாஸ்-சிவகார்த்திகேயன் காம்போவில் மதராஸி படம் உருவாகியுள்ளது
மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத்தின் பேச்சால் சிவகார்த்திகேயன் கண்கலங்கினார்
அமரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ்சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் கிராஃப்ட் வேறொரு இடத்திற்கு நகர்ந்துள்ளது. ’அமரன்’ படத்தின் மூலம் 300-கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய தமிழ் ஹீரோக்கள் பட்டியலில் ரஜினி, விஜய், கமலுடன் தன்னை இணைத்துகொண்டார்.
இந்நிலையில், அமரன் படத்திற்கு பிறகு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஏஆர் முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், படத்தின் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது. படம் முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. சர்க்கார், தர்பார் திரைப்படங்களின் சரிவிற்கு பிறகு ஏஆர் முருகதாஸ் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அனிருத் பேச்சால் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்..
மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய அனிருத்தின் பேச்சைக்கேட்ட நடிகர் சிவகார்த்திகேயன் கண்கலங்கிய சம்பவம், அனிருத்துக்கும்-சிவகார்த்திகேயனுக்கும் உண்டான நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் குறித்து பேசிய அனிருத், “மதராஸி படம் சிவகார்த்திகேயன் கூட எனக்கு 8வது படம். நான் 3 படம் பண்ண பிறகு சிவாவோட எதிர்நீச்சல் படத்தில இருந்தே ரெண்டு பேரும் ஒன்னா பண்ணிட்டு இருக்கோம். அப்படத்தில் இருந்து தான் எங்கள் இருவருடைய கேரியரும் சேர்ந்தே வளர்ந்தது. அதனாலேயே எனக்கு அவருடைய படங்கள் என்றாலே ஒரு பிணைப்பு இருக்கும், அது இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் மாறாது. நான் முதல்ல மாஸ் ஸ்கோர் பண்ணதும் அவருக்கு தான்.
சிவகார்த்திகேயன் எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட். அவர ஒரு சிறந்த நபரா எனக்கு பிடிக்கும், அவருடைய நல்ல மனசால தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். திரையுலகில் பல பேர் வருவாங்க, போவாங்க. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் நிலையாக இருப்பார். 50 கோடி, 100 கோடினு பண்ணி இப்போ 300 கோடி வரை வந்துவிட்டார். அவர் ஜெயிக்கும் போது எல்லாம் எனக்கு பெருமையாக இருக்கும்.
ஒரு நாள் நானும் திரையுலகில் இருந்து காணாமல் போகலாம். அப்போது சிவகார்த்திகேயன் ஜெயித்தால் நான் ஜெயித்தது போன்று இதயப்பூர்வமா உணர்வேன். ‘மதராஸி’ படத்தில் புதுவிதமான சிவகார்த்திகேயனை காண உள்ளீர்கள். கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்குறன், ’மதராஸி’ ட்ரெய்லரின் இறுதியில் ‘இது என் ஊரு சார். நான் வந்து நிற்பேன்’ என்று ஒரு வசனம் வரும். அதே போல் தான் இது என் எஸ்.கே. நான் வந்து நிற்பேன்” என அனிருத் பேசபேச கண்கலங்கியபடி சிவகார்த்திகேயன் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.