55 வருடங்களுக்கு பிறகு பத்ம பூஷன் விருதா..? வைரலான ஜானகியின் வீடியோ!
தென்னிந்திய இசைக்குயில் எஸ். ஜானகி மறைவால் இசை உலகம் துயரத்தில் மூழ்கியுள்ள நிலையில், 2013ல் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்து பேசிய பழைய வீடியோ மீண்டும் வைரலாகிறது. 55 ஆண்டுகள் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடிய அவர், விருதுகளுக்காக அல்ல, ரசிகர்களுக்காக மட்டுமே பாடுவேன்; அவர்களே எனக்கான மிகப் பெரிய வெகுமதி என உருக்கமாக கூறியிருப்பது அந்த வீடியோவில் வெளிப்படுகிறது.
செய்தியாளர் - M. மீரா
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மைசூரில் நேற்று (ஜூலை 11) காலமானார். அவரது மறைவு, இசையுலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் இசைக்குயில் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இந்த மூத்த கலைஞர், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது சிறப்பான இசைப் பயணத்தில், பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்குத் தனது குரலை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை வாங்க மறுத்த, மறைந்த பாடகி ஜானகி பேசியிருந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, எனக்கு பத்ம பூஷன் கொடுத்தார்கள் நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். அரசு மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. என் மீதான அன்பின் வெளிப்பாடாகவே அரசு பத்ம பூஷன் கொடுத்திருக்கிறார்கள். 55 வருடமாக பாடி வருகிறேன். பல மொழிகளில் பல பாடல்கள் பாடி வருகிறேன். நான் மொழி வளமையுடன் பாடுவேன் என்று மற்றமொழி ரசிகர்கள் என்னை பாராட்டியுள்ளனர்.
பாரத ரத்னா கொடுத்தால் வாங்குவேன் இல்லையென்றால் எனெக்கு எந்த விருதுகளும் வேண்டாம். எனக்கு விருதுகள் மீதும் துளிக்கூட ஆர்வமில்லை. நான் எந்த ஒரு விருதுக்காகவும் பாட வரவில்லை. நான் பாடியதெல்லாம் என்னுடைய அன்பான ரசிகர்களுக்காக மட்டுமே. என் ரசிகர்களும் நண்பர்களும் எப்போதும் என்னோடு இருக்கிறார்கள். அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. அதைவிடப் பிரமாண்டமான ஒரு விருது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை” என்று பேசியிருந்தார்.

