\
Indian playback singer S Janaki Passed away
S Janakix page

’இசையோடு இசையான இசைப் பேரரசி..’ 17 மொழிகளில் 16 ஆயிரம் பாடல்கள்.. காலமானார் எஸ்.ஜானகி!

ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக இருந்த இவருக்கு, 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில், தமிழில் முதன்முதலாக பின்னணி பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
Published on

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88), வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார். அவரது மறைவு, இசையுலகில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’இசைப் பேரரசி’ என்று மொத்தத் தென்னிந்திய திரையுலகமும் கொண்டாடும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர். சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் இருந்ததால், நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்ற இவர், அகில இந்திய வானொலி 1956-இல் பாட்டுப் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் கலந்துகொண்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.

ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக இருந்த இவருக்கு, 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில், தமிழில் முதன்முதலாக பின்னணி பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. டி.சலபதிராவ் இசையில் அவர் பாடிய அந்தப் பாடல் அடுத்த நாளே, கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை இவருக்குப் பெற்று தந்தது. அதன் தொடர்ச்சியாக, அறிமுகமான முதல் வருடத்திலேயே ஆறு மொழிகளில் 100 பாடல்களைப் பாடி புதிய சாதனையைப் புரிந்தார்.

ஜானகியின் வாழ்க்கையில், பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் 'கொஞ்சும் சலங்கை.' எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையோடு இணைந்து இந்தப் படத்திற்காக பாடிய அவர், 'சிங்காரவேலனே தேவா...' என்ற பாடல் இன்றுவரை ரசிகர்கள் விரும்பிக் கேட்கின்ற பாடலாக இருந்து வருகிறது. இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்த அந்தப் பாடலைத் தொடர்ந்து ஜானகிக்கு பரவலாக வாய்ப்புகள் வந்தாலும் தமிழில் அவரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் இவர் பாடிய ’அன்னக்கிளி’தான். அந்தப் படத்திற்காக இவர் பாடிய எல்லாப் பாடல்களுமே ஹிட் பாடல்கள் என்றாலும் ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்று தொடங்கும் பாடல் இவருக்கு தனியானதொரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

அதைத்தொடர்ந்து இவர் பாடல் இடம்பெறாத படமே இல்லை என்ற நிலை தமிழ்த் திரையுலகில் ஏற்பட்டது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழ்ப்படங்களில் எல்லா பிரபல கதாநாயகிகளுக்கும் பின்னணி பாடினார். அதிலும், ஒரேநாளில் இவரது குரலில் நாலைந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னணிப் பாடுவதில் எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 17 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். இத்தனை மொழிகளில் பாடல்கள் பாடிய இந்தச் சாதனை திரையுலகில் இதுவரை எவரும் நிகழ்த்தாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ள இவர் ’மௌனப் போராட்டம்’ என்ற தெலுங்குப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.ஐந்து வயது குழந்தையின் குரலிலும், அறுபது வயது கிழவியின் குரலிலும் குரலை மாற்றி பாடக்கூடிய ஆச்சர்யமான திறமையும் இவருக்கு உண்டு. சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ள இவருக்கு, பத்ம பூஷண் விருதிணை அளித்து மத்திய அரசு கவுரவித்துள்ளது.

ஐந்து முறை தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருது பெற்ற இவர், 13 முறை கேரள அரசின் விருதுகளையும் 7 முறை ஆந்திர அரசின் விருதுகளையும், ஒரு முறை ஒடிசா அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். இதுதவிர கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். இவரது கணவர் பெயர் வி.ராமபிரசாத். இந்தத் தம்பதிகளின் ஒரே மகன் வி.முரளிகிருஷ்ணா, சில திரைப்படங்களிலும் நடித்துள்ள முரளிகிருஷ்ணா, 'ஆடியோ கேசட்' தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவருடைய மனைவி உமா முரளிகிருஷ்ணா, புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞராக உள்ளார்.

இவர் பெற்றிருக்கும் புகழின் அளவு மிக அதிகம். ஆனால், இவரோடு பழகும் எவரும் அப்படிப்பட்ட பெரும் புகழுக்கு சொந்தக்காரருடன் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று உணர முடியாது. அந்த அளவிற்கு எளிமையாகப் பழகும் குணம் கொண்டவர் இவர். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com