ஒரு படம்கூட MUSIC போடல| அபயங்கருக்கு குவியும் வாய்ப்புகள்.. வஞ்சிக்கப்படும் ஷான் ரோல்டன், SAM C.S?
சமீப காலங்களில் நம் காதுகளில் தேனிசையாக ஒலித்த ‘தலைகோதும் இளங்காத்து, கோடி அருவி கொட்டுதே, இறைவனாய் தந்த இறைவியே, பார்த்தன் களவுபோன நிலவ நான் பார்த்தேன், நான் காலி’ என பல்வேறு பாடல்களை முணுமுணுக்க வைத்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், லப்பர் பந்து, டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களில் BGM-களால் நம்மை கட்டிப்போடவும் செய்துள்ளார்.
அதேபோல ”கைதி, விக்ரம் வேதா, பிளாக், டிமாண்டி காலனி 2, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், அடங்க மறு, லக்ஷ்மி” போன்ற படங்களின் BGM-களாலும், பாடல்களாலும் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இதுபோக புஷ்பா 2 திரைப்படத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.
இப்படி பாடல்கள் மூலமாகவும், பேக்ரவுண்ட் ஸ்கோர் மூலமாகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்றிருந்தாலும், இன்னும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்காமலே இருந்துவருகிறது.
இந்நிலையில், பல படங்களில் திறமையை நிரூபித்திருக்கும் ஷான் ரோல்டன் மற்றும் சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளர்களை விட்டுவிட்டு, இதுவரை ஒரு படம் கூட இசைமைக்காத சாய் அபயங்கருக்கு சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜுன் போன்ற பெரிய ஹீரோக்களின் 7 படங்கள் சைன் செய்யப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
சூர்யா முதல் எல்சியு வரை..
தமிழ் சினிமாவில் புது திறமையாளர்களுக்கு என எப்போதும் தனி இடம் இருந்துவருகிறது. அதன்படி ’கட்சி சேர (என்னமே என் முன்னால)’ , ’ஆச கூட (என் பக்கம் போனவள தேடஒரு மூச்சு தள்ள)’ போன்ற ஆல்பம் பாடல்களால் எல்லோரையும் கட்டிப்போட்ட சாய் அபயங்கர், ஒரு திரைப்படத்திற்கு கூட இசையமைக்காமல் அடுத்தடுத்து 7 பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு கமிட்டாகியுள்ளார்.
ஒரு ஆல்பம் பாடல் ஹிட் கொடுத்தால் இத்தனை படங்களுக்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆச்சரியம் ரசிகர்களுக்கு எழுந்தாலும், இதற்கு முன்பு திரைப்படங்களுக்கு ஹிட் பாடல்கள், ஹிட் பிஜிஎம்கள் என கொடுத்து வாய்ப்புக்காக காத்திருக்கும் இசையமைப்பாளர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இவருக்கு மட்டும் எப்படி என்ற குழப்பமும் எழுந்துள்ளது. சாய் அபயங்கர் பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் அபயங்கர் கமிட்டாகியுள்ள படங்கள்:
பென்ஸ் - ராகவா லாரன்ஸ் - லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படம் LCU-ல் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது
கருப்பு - சூர்யா, திரிஷா - ஆர்ஜே பாலாஜி (இயக்குநர்)
மார்ஷல் - கார்த்தி - 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ்
டியூட் - பிரதீப் ரங்கநாதன் - இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன்
பல்டி - ஷேன் நிகாம் - அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம்
STR49 - சிம்பு - ராம்குமார் பாலகிருஷ்ணன்
AA22xA6 - அல்லு அர்ஜுன் 22வது படம் - அட்லீ 6வது படம் - இந்தியாவின் பிரமாண்ட திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதுபோக சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்திலும் சாய் அபயங்கர் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த விசயம் தமிழ் சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நேற்று, இன்று அனிருத்.. இனி சாய் அபயங்கர்?
தமிழ் சினிமாவின் இசை உலகை கடந்த 10 வருடங்களாக தன் வசம் வைத்திருப்பவர் அனிருத் ரவிசந்திர். ரஜினி, விஜய் என பெரும்பாலான ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் இவர் வசமே இருந்து வருகிறது. இரைச்சலாக இருக்கிறது, பாடல்கள் புரியவில்லை என பல விமர்சனங்கள் வந்தாலும் இளம் தலைமுறையினர் மத்தியில் பாடல்கள் ஹிட் அடித்துவிடுவதால் அவரே இசை உலகில் கோலோச்சி வருகிறார். 2012-ல் 3 படம் மூலம் அறிமுகமானவர் தற்போது வரை மிகவும் பிஸியான அதிக மார்க்கெட் வேல்யூ உள்ள இசையமைப்பாளராக இருக்கிறார்.
அனிருத்தை தொடர்ந்து அந்த இடத்தை இனி சாய் அபயங்கர் பிடிக்கலாம் என்றே அவருக்கு கிடைத்து வரும் வாய்ப்புகள் சொல்கிறது. ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை. ஒரே நேரத்தில் இத்தனை வாய்ப்புகள் என்பது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.