ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பேட்ட’ படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.
இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.
அனிருத், எஸ்பிபி ஆகியோர் இணைந்து பாடிய இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினிக்கு குத்து பாடல் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதையடுத்து ‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘உல்லல்லா’ என்ற பாடலை யுடியூப்பில் படக்குழு வெளியிட்டனர். இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ‘பேட்ட’படத்தின் இசைவெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.