எப்படி இருக்கு தளபதி கச்சேரி? | Jana Nayagan Review | Vijay | H Vinoth
எப்படி இருக்கு தளபதி கச்சேரி?(2.5 / 5)
மகளுக்காகவும், மக்களுக்காவும் போராடும் ஒருவரின் கதையே ஜனநாயகன்!
தளபதி வெற்றி கொண்டான் (விஜய்) சிறையில் இருக்கிறார். அங்கு உள்ள ஜெயிலர் ஸ்ரீகாந்த் (கௌதம் மேனன்) மற்றும் அவரது மகள் விஜி (மமிதா பைஜூ) உடன் நல்ல நட்பு ஏற்படுகிறது. தளபதி விடுதலையாகி வெளியே வந்ததும் ஜெயிலரை சந்திக்க செல்கிறார். எதிர்பாரா விதமாக ஜெயிலர் இறந்துவிட அவரின் மகள் விஜியை வளர்க்கும் பொறுப்பு தளபதிக்கு வருகிறது. தந்தையின் மரணத்துக்கு பின் எதைப்பார்த்தாலும் பயம் கொள்ளும் விஜியை தைரியமான ஆளாக மாற்றி, இராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே தளபதியின் நோக்கம். இன்னொரு பக்கம் இந்தியாவை நாசமாக்கும் திட்டத்தோடு வருகிறார் ஹிம்லர் (பாபி தியோல்). இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது? தளபதி எதற்காக சிறைக்கு போனார்? ஹிம்லர் எதனால் இந்தியாவை அழிக்க நினைக்கிறார்? இதெல்லாம் தான் ஜனநாயகன் பட மீதிக்கதை.
பகவத் கேசரி கதையில், முக்கியமான பிரச்னையும் இணைத்து கொடுக்க முயன்றிருக்கிறார் ஹெச் வினோத். அதை முடிந்த வரை பொழுதுபோக்கு சேர்த்தும் பரிமாறி இருக்கிறார்.
படத்தின் முதல் ப்ளஸ் நடிகர் விஜய் தான். எப்போதும் போல ஆக்ஷன், டான்ஸ், ஹூமர் என எனர்ஜியாக வருகிறார். மகளிடம் பாசமாக பேசுவது, அவள் விலகி போகும்போது வருந்துவது, இடைவேளை காட்சியில் மாஸ் காட்டுவது என எப்போதும் போல அசத்துகிறார். மமிதா பைஜூ கதாபாத்திரத்தின் தேவை அறிந்து நடித்திருக்கிறார். இராணுவத்தில் சேர சொல்லி வற்புறுத்தப்படும் போது தவிப்பது, பிரச்சனைகள் கண்டு நடுங்குவது, தைரியம் வந்த பின்னால் பந்தாடுவது என சிறப்பான நடிப்பு. பாபி தியோலுக்கு மிரட்டலான வில்லன் வேடம். ஆனால் பார்த்து பழகிய அதே பாணியில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கிறார், ஆனால் அவரது பாத்திரத்துக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன், ரேவதி என ஏகப்பட்ட நடிகர்கள் வந்து போகிறார்கள்.
அனிருத் தன்னுடைய இசை மூலம் படத்துக்கு மாஸ் ஏற்றுகிறார். பாடல்களும் துள்ளலான உணர்வை கொடுக்கின்றன. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு ஒரு மாஸ் மசாலா படத்துக்கான தேவை அறிந்து உழைத்திருக்கிறது. ஒரு மாஸ் கமர்ஷியல் படத்துக்குள் குட் டச், பேட் டச் பற்றி பேசி இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கூடவே சாதி, மதம், இனம், மொழி என பிரித்தாளப்படும் சூழ்ச்சிக்கு தீர்வாக மனிதத்தையும், ஒற்றுமையையும் சொல்வதும் கவனிக்க வேண்டியது.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், பகவத் கேசரி கதைக்குள் அரசியல் சூழ்ச்சிகள், ஆயுத கடத்தல், தீவிரவாதம் என பல விஷயங்களை கலந்து சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவை கதைக்குள் இயல்பாக பொருந்தவில்லை. விஜய் அவர்களின் அரசியல் வருகையை மனதில் வைத்து படத்தில் திணிக்கப்பட்ட விஷயங்களும் துருத்திக் கொண்டு நிற்கின்றன. க்ளைமாக்சில் வரும் ரோபோ சண்டைகாட்சிகள் கூட கொஞ்சம் ஓவர் டோஸ் போல தான் இருக்கிறது. ஒரு வளர்ப்பு தந்தை - மகள் கதையாகவும், மகளுக்கு இருக்கும் பயத்தை போக்க அந்த தந்தை எடுக்கும் முயற்சிகள் என்பது வரை இயல்பாக இருக்கிறது கதை. விஜய் போலீஸ் ஆக வரும் ஃபிளாஷ்பேக் கூட கமர்ஷியல் சினிமாவுக்கான பேக்கேஜ் என ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது.
ஆனால் நாட்டுக்கே ஆபத்து, அதை ஹீரோ சரி செய்கிறார் என கதை நகர்வது மிகைப்படுத்தலாக தெரிகிறது. அது போன்ற காட்சிகளில், அந்த மிகப்படுத்தலையும் நம்ப வைக்கும் வகையில் இருந்திருந்தால் இன்னும் மாஸ் ஆக இருந்திருக்கும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால் பகவத் கேசரி படம் சார்ந்த விஷயங்களை காட்டுவது வரையில் நன்றாக இருந்த படம், இப்படத்துக்கு என செய்யப்பட மாறுதல்களில் அத்தனை வலு இல்லாததால் இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. குறிப்பாக கடைசி 30 நிமிட சண்டை காட்சி பெரிய அயர்ச்சியை உண்டாக்குகிறது. எல்லாம் தாண்டி ஒட்டு மொத்தமாக பார்க்கையில், இத்தனை ஆண்டுகள் நமக்கான பொழுதுபோக்கை வழங்கிய ஒரு மாஸ் ஹீரோவின் கடைசி படம் என்பது சற்று உணர்ச்சிபூர்வமாக தான் இருக்கிறது.
மொத்தத்தில் ஜனநாயகன் ஒரு ஆவரேஜ் மாஸ் கமர்ஷியல் படம் தான். ஓரளவு பொழுதுபோக்கை கொடுக்கும் படம் என சொல்லலாம்.

