Vanangaan Review | அழுத்தமும் இல்ல.. தெளிவும் இல்ல.. பழமைவாதத்தில் மூழ்கித்துடிக்கும் 'வணங்கான்'
Vanangaan review(1 / 5)
அநீதிக்கு தர்மத்தின் படி பதிலடி கொடுக்கும் இளைஞன் சந்திக்கும் பிரச்னைகளே 'வணங்கான்'
கோட்டி (அருண் விஜய்) கன்னியாகுமரியில் தன் தங்கை தேவி (ரிதா) உடன் வசித்து வருகிறார். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரான கோட்டி கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு, சுற்றத்தார் நண்பர்களுடன் மகிழ்வான வாழ்க்கையை வாழ்கிறார். ஆனாலும் கண்முன்னே அநியாயம் நிகழ்ந்தால் வெகுண்டு எழுந்து தட்டிக் கேட்கும் கோபக்காரர்.
கோட்டியின் எதிர்கால வாழ்வு நலம் பெற வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் வேலைக்கு சேர்த்து விடுகிறார் அவர்மீது அக்கறை கொண்ட சர்ச் ஃபாதர். அங்கு நிகழும் ஒரு அநீதியை கண்டு, அவர் கோபம் கொள்ள, அது அவரை போலீஸ், கோர்ட் என கொண்டு செல்கிறது. அதன் பின் நடப்பவை என்ன என்பதே மீதிக்கதை.
கோட்டி எப்படிப்பட்டவன், அவனின் தங்கை, அவன் மீது ஆசை கொண்ட பெண், இவர்களுக்குள் வரும் சின்ன சின்ன சண்டைகள் என நகர்ந்து ஆதரவற்றோர் காப்பகத்தில் கோட்டி வேலைக்கு சேர்வது வரை ஓரளவு இயல்பாக நகர்கிறது படம். அருண் விஜய் கோட்டி கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க தன்னாலானவரை முயன்றிருக்கிறார். பேசாமலே தன் உணர்வுகளை கடத்துவது, ஆக்ரோஷமாக வேட்டையாடுவது, தங்கையை காணாமல் தவிப்பது எனப் பல இடங்களில் சிறப்பு. தேவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ரிதா எமோஷனல் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். கேமியோவில் வரும் மிஷ்கின், சமுத்திரக்கனி மற்றும் இன்னும் பல துணை பாத்திரங்கள் கொடுக்கப்பட்ட வேலையை முடித்திருக்கிறார்கள்.
பாலா படங்கள் எப்போதும் ஒரு துயரை, சில குதூகலமும் கொண்டாட்டமும் கலந்து சொல்பவை. அப்படித்தான் வணங்கான் கதையும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கால பாலா படங்களில் இருந்த ஜீவனும், உயிர்ப்பும் வணங்கானில் துளியும் இல்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் இந்தக் கதையில் வரும் எந்தப் பாத்திரத்துடனும் நம்மால் எமோஷனலாக கனெக்ட் ஆகா முடிவதில்லை. எனவே அவர்களுக்கு என்ன நடந்தாலும் "மேல சொல்லு" என்ற மோடிலேயே இருக்கிறது.
இதுவரை வந்த பெரும்பாலான பாலா படங்களில் ஒரு முரணை கவனிக்க முடியும். சேதுவில், தான் விரும்பிய பெண்ணின் நினைவுகள் அவனுக்கு திரும்பும் போது, அவள் இறந்துவிடுவாள். நந்தாவில், ஒரு தாயே தன் மகனை கொலை செய்வாள். பிதாமகனில், தனக்கு அன்பு என்றால் என்ன எனக் காட்டிய ஒருவனை இழந்து மீண்டும் மிருகமாவான்.
பரதேசியில் ஒருவன் எங்கிருந்து தப்பிக்க நினைக்கிறானோ, அங்கு அவனுடைய குடும்பத்தோடு மாட்டிக் கொள்கிறான். இப்படி யோசிக்கும் போதே அதன் துயர் தோய்த்த ஒரு முரண் நம் நினைவில் எழும். வணங்கானில் கூட ஒரு முரண் உண்டு, ஆனால் அது மிகவும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. சாம் சி எஸ் பின்னணி இசையில் தேவைக்கு அதிகமாகவே ஒலிப்பது சலிப்பு. ஜிவி பிரகாஷ் இசையில் மௌனம் போலே பாடல் அத்தனை இனிமை.
மேலும் முன்பெல்லாம் வன்முறை மூலம் கதாப்பாத்திரங்களின் வலியை நமக்கு கடத்திய பாலா, வணங்கானில் மிகக் கொடூர வன்முறையை வெறுமனே அதிர்ச்சிக்கான கருவியாக பயன்படுத்தி இருக்கிறார். மேலும் ஒரு காட்சி முகம் சுழிக்கும்படி இடம்பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட அந்த காட்சியை இன்னும் கவனமாக, பொறுப்பாக கையாண்டிக்க வேண்டும் இயக்குநர்.
இதில்லாமல் ஏற்கனவே குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றி மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்படும் வேளையில், போக்ஸோ பற்றிய அந்த காட்சி அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. மேலும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை, சட்டத்தின் முன் நிறுத்தாமல், அதை வெளியே சொன்னால் அசிங்கம் என மறைத்து பழமைவாதம் பேசுவது முற்றிலும் ஏற்புடையதாய் இல்லை.
மொத்தத்தில் அழுத்தம் ஏதும் இல்லாமல், சொல்வது என்ன என்ற தெளிவும் இல்லாமல், வெறுமனே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வன்முறைகள் மட்டுமே படத்தில் இடம்பெற்றிருக்கிறது.