”படம் எடுக்குறது தான் உன்வேலை.. எப்படி பார்க்கணும்னு சொல்லி கொடுக்காத” - ரசிகர்கள் குறித்து பாலா!
சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய நடிகர்கள் எடுக்கும் படங்கள் அதிகப்படியான விமர்சனங்களுக்கு உள்ளானது பேசுபொருளாக மாறியது. அது எந்தளவுக்கு பெரிய பிரச்னையாக உருமாறியது என்றால் படம் வெளியான ஒரு வாரத்திற்குள் யாருமே படம் குறித்து விமர்சனங்களை வெளியிடக்கூடாது என்றும், அதை தடைசெய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவுக்கு சென்றது.
பலபேர் நீங்கள் படத்தை சரியாக எடுக்காமல், ரசிகர்களுக்கு எப்படி படம் பார்க்க வேண்டும் என்று பாடம் எடுக்காதீர்கள் என சினிமா தரப்பிற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் பாலா, படம் எடுப்பவர்களை விட படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் அதிகம் தெரியும் என்றும், அவர்களை நம்மால் ஏமாற்றிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரசிகருக்கு பாடம் எடுக்க முடியாது..
படம் பார்க்கும் ரசிகர்கள் குறித்து நேர்காணலில் பேசியிருக்கும் இயக்குநர் பாலா, “பாலு மகேந்திராவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது, பசி என்று சொன்னால் வாழைப்பழத்தை கொடு, கடினமாக இருந்தால் உறித்து கொடு, ஆனால் ஊட்டிவிடும் வேலையை செய்யாதே, அவனுக்கென்று சுயபுத்தி இருக்கிறது என்று கூறுவார்.
இயக்குநராக நீ 10 படமோ அல்லது 15 படமோ எடுக்கப்போற, ஆனால் ரசிகர்களோ 100-க்கும் மேற்பட்ட படங்களை பார்க்கிறார்கள், அவர்களுக்கு தான் உன்னை விட சினிமா அறிவு அதிகம். படத்தில் என்ன தவறு இருக்கிறது, எப்படி படத்தை எடுத்திருக்கலாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், நம்மால் ரசிகர்களை ஏமாற்றிவிட முடியாது.
நீ ஒரு படம் எடுத்துவிட்டு அதை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னால், உன்வேலை படம் எடுக்கிறது, நீ படத்தில் அனைத்தையும் சொல்லு நான் புரிஞ்சிக்குறன், ஆனால் எனக்கு எப்படி படம் பார்க்கனும்னு சொல்லாத என்ற கோவம் ரசிகர்களுக்கு ஏற்படும். அந்த கோவம் ரசிகர்களுக்கு இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.