அட்டகாசமான ஆக்ஷன் சினிமா! | The Furious Review!
அட்டகாசமான ஆக்ஷன் சினிமா!(3 / 5)
மகளுக்காக ஒரு தந்தையின் ஆக்ஷன் அவதாரம்தான் `The Furious'.
தொலைந்துபோன ஒரு சிறுவனைப் பற்றி விசாரிக்கத் துவங்கும் பத்திரிகையாளர் Matia திடீரென காணாமல் போகிறார். அதே நகரத்தில் வசிக்கும் Wang Wei பேச்சு சவால் கொண்ட மாற்றுத்திறனாளி, சின்னச்சின்ன வேலைகளைச் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்துகிறார். விடுமுறைக்காக அவருடன் தங்கவந்திருக்கும் மகள் Rainy திடீரென ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். கடத்தல் வாகனத்தைப் பின்தொடரும் Wang Wei எவ்வளவு முயன்றும் மகளைக் காப்பாற்ற முடியாமல் போக, ஒன் மேன் மிஷனாக மகளைக் கண்டுபிடிக்கக் கிளம்புகிறார். இந்த முயற்சியில் அவர் சந்திக்கும் தடைகள் என்ன? அவரது மகள் கிடைத்தாரா என்பதெல்லாம்தான் `The Furious' பட மீதிக்கதை.
மிக எளிமையான ஒரு கதை, மிகவும் பழக்கப்பட்ட கதையும்கூட. ஆனால், அதில் அட்டகாசமான ஆக்ஷன் சேர்த்து ஒரு நிமிடம்கூட ஸ்க்ரீனைவிட்டு கண்ணை அகலவிடாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குநர் Kenji Tanigaki.
படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதையும், சண்டை வடிவமைப்பும்தான். எந்தக் காட்சியையும் தேவை இல்லாமல் இழுத்துச் சொல்லாமல், சொல்ல வேண்டியதைச் சுருக்கமாக, கச்சிதமாகச் சொல்லி நகர்த்துகிறார். இதற்கிடையே அப்பா - மகள் சென்டிமென்ட், சிறையில் பூக்கும் இருவரது நட்பு, மனைவியைத் தேடும் கணவனின் முயற்சிகள், உப வில்லனின் மகனை வைத்து வரும் காட்சி எனப் பார்த்துப் பார்த்து நேர்த்தியாக்கி இருக்கிறார்கள்.
சேசிங்கில் துவங்கும் அதிரடி, மார்க்கெட், பப், ஐஸ் ஃபேக்ட்ரி, போலீஸ் ஸ்டேஷன், காலி கட்டடம் என பல இடங்களுக்கு தாவுகிறது. ஒரு காட்சியில் இருந்து சண்டை நோக்கி மாறக்கூடிய அந்த மாறுதல் மிகவும் இயல்பாக இருப்பது இன்னும் ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் Kenji Tanigaki and Kensuke Sonomura பிரமாதமாக வடிவமைத்துள்ளனர். அதிலும் ஐந்து பேர் மோதிக்கொள்ளும் ஒரு சண்டைக் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்த விதம் எல்லாம் கொஞ்சமும் யூகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.
லீட் ரோலில் நடித்துள்ள Xie Miao, அவருக்கு உதவியாக வரும் Joe Taslim இருவருமே நடிப்பிலும் சரி, ஆக்ஷனிலும் சரி அசத்துகிறார்கள். மகள் பாத்திரத்தில் வரும் Yang Enyouயும் எமோஷனல் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் நடிப்பைக் கொடுக்கிறார். Brian Le, Yayan Ruhian, Joey Iwanaga மூவருமே மிரட்டல் வில்லன்களாக அசத்துகிறார்கள். எழுத்தில் இன்னொரு ப்ளஸ் ஹீரோ யார் என்பதை கடைசிவரை மர்மமாக வைத்தது நல்ல ஐடியா. மேலும் ஒரு காலையில் துவங்கி அடுத்த நாள் காலைக்குள் முடியும் கதை வடிவமைப்பும் பரபரப்புக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.
இப்படத்தின் குறைகள் எனச் சொல்வது என்றால், சிஜி காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் கொஞ்சம் இழுவையாக இருந்தது. மேலும் படத்தில் அளவுக்கு மிஞ்சிய வயலன்ஸ் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தியது. இப்படியான குறைகளைக் கடந்து பார்த்தால், ஓர் அட்டகாசமான ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி.

