வித்தியாசமான Si-Fi கதை.. எப்படி இருக்கிறது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம்? | Disclosure Day Review
வித்தியாசமான Si-Fi கதை... எப்படி இருக்கிறது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம்?(2.5 / 5)
உண்மை ஒன்றை உலகுக்குச் சொல்ல நடக்கும் போராட்டங்களே Disclosure Day படத்தின் ஒன்லைன்!
ஸைபர்ஸ்க்யுரிட்டி ஸ்பெஷலிஸ்ட் டேனியல் கெல்னர், Wardex Corporation நிறுவனத்திலிருந்து Extraterrestrial Technology கருவி மற்றும் Roswell incidentக்கு சம்பந்தப்பட்ட சில ஃபைல்களை திருடிவிட்டு தன் காதலியுடன் தப்பி ஓடுகிறார். அவரை Wardex நபர்களிடமிருந்து காப்பாற்றி வழிகாட்டுகிறார் முன்னாள் Wardex ஊழியர் ஹூகோ.
இன்னொரு பக்கம் செய்தி தொலைக்காட்சியில் வானிலை வர்ணனையாளரான மார்கரெட் ஃபேர்சைல்டுக்கு வினோதமான சில நிகழ்வுகள் நடக்கிறது, எப்படியாவது டேனியல் கெல்னரை சென்று சந்திக்கச் சொல்லி உள்ளுணர்வு சொல்ல அவரும் கிளம்புகிறார். டேனியல் கெல்னர் திருடிய ஃபைல்கள் எதைப் பற்றியது?, மார்கரெட்க்கு எதனால் வினோத நிகழ்வுகள் நடக்கிறது?, ஹூகோ தனது குழுவுடன் இணைத்து தயாராவது எதற்காக என்பதெல்லாமதான் இந்த Disclosure Day.
சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களின் மாஸ்டரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இந்த முறை சைன்ஸ் ஃபிக்ஷன் கோணத்தை குறைத்துக் கொண்டு, மனித உணர்வுகள் சார்ந்த ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அதுவே ஒரு புதுமையான உணர்வை படத்துக்குக் கொடுக்கிறது.
லீட்ரோலான மார்கரெட் ஃபேர்சைல்டாக, எமிலி ப்ளண்ட் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். காரில் இருந்து இறங்கி வானிலைச் செய்திகள் சொல்லச் செல்லும் அந்த ஒரு காட்சியே போதும், அவரது நடிப்புக்கான சான்றாக. குழந்தைப் பருவத்தில் நடந்த சம்பவம் ஒன்றை நினைத்து பதறுவது, தன்னைச் சுற்றி நடப்பவை புரியாமல், அதே சமயம் அவற்றைத் தடுக்கவும் முடியாமல் ஒவ்வொரு காட்சியிலும் கவர்கிறார். டேனியல் கெல்னர் பாத்திரத்தில் ஜோஷ் ஓ கார்னர் நடிப்பும் சிறப்பு. ஹூகோ ரோலில் வரும் கால்மேல் டோமிங்கோ நடிப்பும் மிக அழுத்தமாக இருந்தது. எந்த விஷயத்தையும் விரிவாக சொல்லவில்லை என்றாலும், ஏதோ பெரிய பிரச்னைபோல என்பதை தன் நடிப்பின் மூலம் காட்டுகிறார். Wardex குழுவைச் சேர்ந்த நோவா ரோலில் காலின் ஃபிர்த்க்கு மிகவும் வழக்கமான ஹாலிவுட் வில்லன் வேடம். அதற்குத் தேவையானதை செய்கிறார். படத்தின் ப்ரீ க்ளைமாக்ஸ் காட்சிகளில் செய்தி வாசிப்பவராக வரும் Courtney Grace அட்டகாசமாக நடித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். செய்தி வாசிக்கையில் அவர் தரும் உணர்ச்சிகள் நம்மையே கண்கலங்க செய்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக Janusz Kamiński ஒளிப்பதிவு படத்தின் பரபரப்பை பார்வையாளர்களுக்கு கடத்த உதவுகிறது. John Williams பின்னணி இசை, படத்தின் மர்மத்தை தக்கவைக்க பெரிய பலமாக இருக்கிறது. விஷுவலாக படத்தில் குறை எதுவும் இல்லாமல் கொடுக்க VFX குழு உழைத்திருக்கிறது. மனிதர்களுக்கு மட்டும்தான் இந்த பிரபஞ்சமா என்பதுதான் இப்படம் முன்வைக்கும் கேள்வி. மனிதர்களுக்கு உள்ளேயே பிரிவினையை கடைபிடிக்கும் மனநிலைக்கு எதிராக அழுத்தமாக பேசி இருக்கிறது. Extraterrestrial எனப்படுகிற வேற்று உலகவாசிகளை பற்றிய படம் என்றாலும் ஓர் இடத்திலகூட ஏலியன் என்று அடையாளப்படுத்துவதோ, அப்படியான படங்களில் வழக்கமாக இருக்கும் விஷயங்களோ இதில் இல்லை.
இப்படத்தின் குறைகளாகச் சொல்வதென்றால், கண்டிப்பாக விறுவிறுப்பான ஒரு ஸ்பீல்பெர்க் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு திருப்தியைக் கொடுக்காமல் போகலாம். மேலும், படத்தின் முதல் பாதி முழுக்க பல விஷயங்கள் நடந்தாலும், நம்மை எதுவும் கவராமல் நகர்கின்றன. முதல் பாதி முழுக்க வசனங்களால் நிறைந்திருப்பதும் மைனஸ். இரண்டாம் பாதி துவங்கியது முதல் விறுவிறுப்பாகும் படம் க்ளைமாக்ஸ் வரை சிறப்பாக அழைத்துப் போகிறது. வழக்கமான ஸ்பீல்பெர்க் படங்களபோல விறுவிறுப்பு, புத்திசாலித்தனமான திருப்பங்களை எதிர்பார்க்காமல் பார்த்தால் கண்டிப்பாகப் பிடிக்கும்.
மொத்தத்தில் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, முதல் பாதியிலும் இருந்திருந்தால் அட்டகாசமான அனுபவத்தை அளித்திருக்கும் இந்த Disclosure Day.

