\
Bharathiraja ask me to do camera for his film says Theni Eshwar
Theni EshwarBharathiraja

"நாம சேர்ந்து படம் பண்ணணும்டானு சொல்லிட்டே இருப்பார்" பாரதிராஜா குறித்து தேனி ஈஸ்வர் உருக்கம்!

அவர், என் அப்பா மாதிரி. அப்பா மாதிரி எல்லாம் இல்லை, அப்பாதான்! அவர் இல்லாத இந்த நேரம், என்னால நம்பவே முடியவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது, அதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.
Published on

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் பாரதிராஜா சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை இயற்கை எய்தினார். இவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று பாரதிராஜாவின் சொந்த ஊரிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், பாரதிராஜா மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு ஓர் ஆழமான வலி. அவருடைய திரைப்படங்களைப் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன். அவர் என்னிடம் அடிக்கடி சொல்லும் விஷயம், `நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணணும்டா' என்பதுதான். எப்போது நான் அவரைச் சந்தித்தாலும் இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார். ஓர் அப்பா, பையன் என்ற உறவுதான் எங்களுக்குள் இருந்தது. அவர் இயக்கும் திரைப்படத்திற்கு, என்னை ஒளிப்பதிவு பண்ண கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

நான் எடுத்த என்னுடைய திரைப்படங்களில், அவருக்கு என்னுடைய பணி மிகவும் பிடித்திருந்தது. என்னை அப்படி பாராட்டிக் கொண்டே இருப்பார். ஒவ்வொரு விஷயங்களையும் டெக்னிக்கலா என்னிடம் கேட்பார், சொல்லிக் கொடுப்பார். அவர், என் அப்பா மாதிரி. அப்பா மாதிரி எல்லாம் இல்லை, அப்பாதான்! அவர் இல்லாத இந்த நேரம், என்னால நம்பவே முடியவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது,

Theni Eshwar
Theni EshwarBharathiraja

அதை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. நான் சினிமாவுக்கு வந்ததே அவருடைய திரைப்படங்களைப் பார்த்துத்தான். நான் எடுக்கிற படங்களில் வில்லேஜ் ஃபீல் (Village feel) இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் அவருடைய படங்களை நான் பார்த்ததால் வந்த தாக்கம்தான். அவரிடம் நான் பணியாற்றியதில்லை, ஆனால் அவர் படங்களைப் பார்த்து, அவருடன் பேசி, அவர் சினிமாவை எப்படி எல்லாம் பார்க்கிறார் என்றெல்லாம் அவர் அருகிலேயே இருந்து அவருடன் பேசியபோது கிடைத்த அனுபவத்தில்தான் நான் இன்று ஒரு கேமராமேன் என்ற நிலையில் இருப்பதாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com