\
Sasi's Nooru Saami Review
SasiNooru Saami

மறுமணம் பற்றி அழுத்தமாக பேசும் சினிமா.. எப்படி இருக்கு `நூறு சாமி'? | Nooru Saami Review | Sasi

மிக அழுத்தமான களத்தை எடுத்து அதனை எவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியுமோ, அப்படி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி.
Published on
மறுமணம் பற்றி அழுத்தமாக பேசும் சினிமா... எப்படி இருக்கு `நூறு சாமி'?(2.5 / 5)

தாயின் மறுமணத்துக்காகப் போராடும் மகன்களின் கதை!

செல்வி (ஸ்வாசிகா) கணவனை இழந்து யார் துணையும் இல்லாமல் தன் இரு மகன்களையும் வளர்த்து ஆளாக்குகிறார். இன்னொரு திருமணம் செய்துகொள்ள விருப்பம் என்றாலும் மூத்த மகன் பாஸ்கரின் (அஜய் திஷன்) எதிர்ப்பால் அந்த எண்ணத்தை கைவிடுகிறார். சில வருடங்கள் கழித்து மறுமணம் பற்றிய பார்வை மாறி, பாஸ்கர் தாயின் மறுமணம் பற்றிய பேச்சை மீண்டும் எடுக்கிறார். இதற்கு செல்வி சம்மதித்தாரா? என்ன எதிர்ப்புகள் வந்தது? என்ன நடந்தது என்பதுதான் `நூறு சாமி' படத்தின் மீதிக்கதை.

Nooru Saami
Nooru Saami

மிக அழுத்தமான களத்தை எடுத்து அதனை எவ்வளவு தெளிவாக சொல்ல முடியுமோ, அப்படி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி. பல எதார்த்த உண்மைகளை பளீச் என முகத்தில் அறையும்படி சொன்ன விதமும் பாராட்டுக்குரியது.

படத்தின் ஆதாரமே செல்வி பாத்திரத்தில் வரும் ஸ்வாசிகாதான். மகன்களிடம் கண்டிப்பு காட்டும் அதேநேரத்தில், அவர்களை அரவணைத்து, அவர்களையே உலகமாக்கிக் கொண்டு வாழும் பல தாய்களின் பிரதிபலிப்பாகத் திரையில் மின்னுகிறார். ஆண் துணை இல்லாமல் வாழும் பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களை தன் நடிப்பில் காட்டும்விதம், ஊராரின் பேச்சுக்குப் பயந்து வாழ்வது, மின்விசிறியிடம் தன் குறைகளைப் பேசி நாட்களைக் கடத்துவது, இறுதியில் தைரியமாக `பாத்துக்கலாம்' எனச் சொல்லும் இடம் என அவரின் பல காட்சிகள் க்ளாப்ஸ் அள்ளுகிறது.

Sasi's Nooru Saami Review
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy

மகன்களாக வருபவர்களில் அஜய் திஷன் இன்னுமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கலாம், சக்தி நடிப்பு சிறப்பு. மாமா பாத்திரத்தில் வரும் கருணாஸ், ஊரில் பஞ்சாயத்து பண்ணும் பாத்திரத்தில் வரும் பாலாஜி சக்திவேல் ஆகிய இருவரின் நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது. இவர்கள் தவிர பாடினி குமார், காவ்யா அனில், அருள்தாஸ், ஜென்சன் திவாகர், கெஸ்ட்ரோலில் வரும் லிஜோ மோல், முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பும் நன்று. படத்தில் சர்ப்ரைஸ் தந்த நடிப்பு ஏழுமலையாக வந்த விஜய் ஆண்டனியுடையது. வெள்ளந்தியான அவரின் பேச்சும், காதலை இயல்பாக வெளிப்படுத்தும் இடமும் என கரைய வைக்கிறார் மனிதர். சில காட்சிகளே வந்தாலும் `ஆகட்டும்பா' என அழுத்தமாக மனதில் பதிகிறார்.

Nooru Saami
Nooru Saami

கள்ளக்குறிச்சியில் நிஜமாக நடந்த சம்பவம் ஒன்றை முன்வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்தில், மறுமணம் என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்னுமும் மறுமணத்தின் மீது பூசப்படும் அவதூறுகளைப் பற்றி ஆராய்கிறது படம். அதற்குள் மறுமணம் தேவையா, இல்லையா என்பது அந்தப் பெண்ணின் முடிவு என்பதில் துவங்கி பெண்ணைச் சாமியாகப் பார்க்காமல், சக மனுஷியாக பாருங்கள் என்பது வரை பல ஆழமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார் சசி. மனரீதியிலான துணை துவங்கி, உடல்ரீதியான துணை வரை ஒவ்வொரு மனிதருக்குமான தேவைகள் குறித்து எந்த விரசமும் இல்லாமல் கமர்ஷியல் மீட்டருக்குள் அதனைப் பேசி இருக்கிறார். "என் புருஷனைக் கொன்னுருந்தாகூட கொஞ்ச வருஷம்தான் ஜெயிலுக்குப் போயிருப்பேன். ஆனா, அவர் இறந்தது என் ஆயுளுக்கான சிறை" என வசனங்கள் மூலமும் படம் சொல்ல வந்த கருத்தை பல இடங்களில் பளீர் என்று காட்டுகிறார் எழுத்தாளர் சசி.

துணை இழந்த ஒரு பெண் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும், மூச்சுமுட்டும் வாழ்க்கையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஷ். எந்த இடத்திலும் அலுப்பு தெரியாதவண்ணம் கதையைப் பரபரப்பாக நகர்த்த உதவி இருக்கிறார் படத்தொகுப்பாளர் ஹரிஷ் யுவராஜ். பாலாஜி ஸ்ரீராம் இசையில் `மாய கனவோ' பாடல் அத்தனை இதம். பின்னணி இசையிலும் உணர்ச்சிகரமான காட்சிகளை உயர்த்திப் பிடிக்கிறார்.

Nooru Saami
Nooru Saami

இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், சீரியஸான காட்சிகளுக்கு இடையே வரும் சில காமெடி காட்சிகள் படத்தின் தீவிரத்தைக் குறைப்பதுபோல இருக்கிறது. பாலாஜி சக்திவேல் பாத்திரம் மூலம் சமூக அழுத்தத்தைப் பதிவு செய்திருந்தாலும், அந்தப் பாத்திரம் இன்னும்கூட இயல்பாக கதைக்குள் வந்திருக்கலாம். மேலும் பக்ஸ் குடும்பத்தின் மூலம் செய்யும் யூடியூப் டிராமா, படத்தோடு ஒட்டாத ஒன்றாக இருக்கிறது. அதுவரை படத்திலிருந்த இயல்புத் தன்மை மிஸ் ஆகிறது. இவை எல்லாம் இருந்தாலும் அவை பெரிய அளவில் தொந்தரவாக இல்லை என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் மறுமணம் பற்றிய புரிதல்களை, பொழுதுபோக்கோடு சேர்த்து சொன்ன விதத்தில் கவனம் கவர்கிறது இந்த `நூறு சாமி'

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com