ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை, அட்லியின் முன்னாள் உதவி இயக்குநர் அசோக் இயக்குகிறார். சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், சென்னையில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கர். ஏற்கெனவே இவரது வீட்டில் இருந்து ஒரு நாயகியாக அதிதி ஷங்கர் சினிமாவில் நடித்து வருகிறார். இப்போது அடுத்த என்ட்ரியாக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். ‘லவ்வர் பாய்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு, கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
சென்னையில் நடைபெற்ற சிறப்புப் பூஜையுடன் ’லவ்வர் பாய்’ திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களான ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், ’வித் லவ்’ புகழ் மதன் உள்ளிட்ட இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் லலித் குமார், 5 ஸ்டார் செந்தில், ஜீ ஸ்டுடியோஸின் அக்ஷய், விநியோகஸ்தர்கள் அழகர் மற்றும் சீனு, திங்க் மியூசிக் சந்தோஷ், ஹாட்ஸ்டாரின் பிரசன்னா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படம் ஏற்கனவே சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'டிமாண்டி காலனி 3' திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

