அதிகாரம் பலம் vs அடையாளமற்ற நபர்... சுவாரஸ்யமாக இருக்கிறதா `மை லார்ட்'? | My Lord Review | Sasikumar
அதிகாரம் பலம் vs அடையாளமற்ற நபர்... சுவாரஸ்யமாக இருக்கிறதா `மை லார்ட்'?(2 / 5)
அதிகாரம் படைத்தவருக்கும் - அடையாளமற்றவனுக்கும் இடையேயான மோதலே `மை லார்ட்'
கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிற்சாலை பணியாளர் முத்துச்சிற்பி (சசிகுமார்), அவரது மனைவி சுசீலா (சைத்ரா ஜே. ஆச்சார்). இவர்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கும்படியாக, அவர்கள் இறந்துவிட்டதாய் அரசாங்க பதிவு சொல்ல, அதனை எதிர்த்து பத்திரிகையாளர் நா கதிர்வேலன் (குரு சோமசுந்தரம்) மூலம் சட்ட போராட்டம் நடத்துகின்றனர். இன்னொருபுறம் அமைச்சர் சுஜாதா மோகன் (ஆஷா சரத்) உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிறுநீரகம் தேவை. அதற்கு ஏற்ற கொடையாளரை சட்டத்துக்கு புறம்பாக தீவிரமாக தேடுகிறார் சுஜாதாவிடம் பணியாற்றும் கிருஷ்ணகுமார் (ராம்குமார் பிரசன்னா). முத்துச்சிற்பி - சுசீலாவுக்கு நிகழும் அநீதிக்கு பதில் கிடைத்ததா, சுஜாதாவுக்கு சிறுநீரகம் கிடைத்ததா? இந்த இரு கதைகளும் எப்படி இணைகிறது? என்பதெல்லாம் தான் `மை லார்ட்'.
சமூக அவலத்தை விறுவிறுப்பான த்ரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். அவலத்தை பற்றி பேசும் அதே நேரத்தில், அன்பை பற்றியும் பேசி அவரது சிக்னேச்சரை போடுகிறார். வறுமையுடன் போராட உடலுறுப்பை விற்கும் அவலத்தையும், அதை சுற்றி நடக்கும் வியாபாரத்தையும், அரசியலையும் இந்தக் கதைக்குள் சேர்த்திருக்கிறார்.
முத்துச்சிற்பி வேடத்தில் வெகுளியான மனிதராக சசிகுமார், மிக இயல்பாக பொருந்திப் போகிறார். ரொம்ப நல்லவர், ரொம்ப வெகுளி `இதுல தான் சார் நான் பிராண்டு' என படம் முழுக்க சிறப்பாக உலவுகிறார் சசி. சில உணர்வுகளை கடத்தும் காட்சியில் மட்டும் சின்ன தடுமாற்றமும், `நந்தன்' படத்தின் Vibeம் சின்ன உறுத்தல். நள்ளிரவில் எழுந்து சாமியாடுவது, பீடி பிடித்தபடி அருள்வாக்கு சொல்வது, மனதில் இருப்பதை பளிச் என சொல்வது, கணவனிடம் பத்து பிள்ளை கேட்டு கொஞ்சுவது என தனக்கு கொடுத்த வேலைகளை பக்காவாக முடிக்கிறார் சுசீலாவாக வரும் சைத்ரா ஆச்சார். ஆனால் ஏனோ அவருக்கு படத்தில் அழுத்தம் குறைவே.
இதில் முதன்மை பாத்திரங்களை தாண்டி ஒரு படி முன்னால் நிற்பது கிருஷ்ணகுமார் பாத்திரத்தில் வரும் ராம்குமார் பிரசன்னா. பக்குவமாக தன் தேவையை சொல்வது, சசியை சமாளிக்க முடியாமல் திணறுவது என இரு வித உணர்வுகளையும் சிறப்பாக கையாளுகிறார். குரு சோமசுந்தரம் புது விதமான கெட்டப்பில் தன் வழக்கமான நடிப்பை கொடுக்கிறார். ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா வந்து போகிறார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான ஆஷா சரத், வில்லத்தனம் காட்டாமல் வில்லியாக நடிக்க வேண்டிய ரோல். தண்ணியை பார்த்தாலே டென்சன் ஆகும் காட்சிகளில் கவர்கிறார். மற்றபடி கதையில் அவருக்கும் முக்கியத்துவம் இல்லை.
எழுத்தாக இந்த கதைக்குள் இருக்கும் இரு விஷயங்களை பாராட்டலாம். எல்லா அதிகாரமும் உள்ள ஒரு நபர், அடிப்படை அடையாளம் கூட மறுக்கப்படும் ஒரு நபர், இந்த இருவருக்குமான உரசலை வைத்து பின்னப்பட்ட கதை. இரண்டாவது க்ளைமாக்ஸ் திருப்பம் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், சின்ன நெகிழ்ச்சியை உண்டாக்கும் ஒன்றாக இருந்தது. படத்தின் பெரிய பலம் ஷான் ரோல்டன் பின்னணி இசை மற்றும் பாடல்கள். `எச காத்தா' பாடல் அவ்வளவு இதம். நீரவ் ஷாவின் கோணங்கள் அத்தனையும் படத்தை தரமாக கொடுத்திருக்கிறது.
படத்தின் சிக்கலே, சுவாரஸ்யமே இல்லாமல் நகரும் திரைக்கதை தான். முதல் பாதி முழுக்க எந்த அழுத்தமான காட்சிகளும் இல்லாமல் தடுமாறும் படம், இடைவேளையில் நிமிர்ந்து அமர வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் மீண்டும் வழக்கமான சீரியல் மோடுக்கு நகர்கிறது. ஹீரோ ஏதோ புத்திசாலித்தனமாக செய்ய போகிறார் என எதிர்பார்த்தால், எதுவுமே இல்லாமல் நீர்த்து போகிறது இரண்டாம் பாதி. சிஸ்டத்தை பகடி செய்யும் வசனங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
நல்ல கருத்துக்களை சொல்ல நினைத்தது போல, அதை நல்ல திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லி இருந்தால், இன்னும் கவனிக்க வைத்திருப்பார் இந்த `மை லார்ட்'.

