அடையாள நெருக்கடியும், காதல் சிக்கலும்! | 29* Review | Rathnakumar
அடையாள நெருக்கடியும், காதல் சிக்கலும்!(2 / 5)
தன் அடையாளத்தையும் தேடவும், தனக்கான காதலையும் கண்டடையவும் முயலும் இளைஞனின் கதை!
சத்யா (விது) சொந்த ஊரான சேலத்திலிருந்து கிளம்பி வந்து, தனக்கான அடையாளத்தை தேடி சென்னையின் நெருக்கடிகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் 29 வயது இளைஞன். அதே நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேரும் விஜியை (ப்ரீத்தி அஸ்ராணி) பார்த்ததும் சத்யாவுக்கு காதல் பூக்கிறது. நட்பாக பழகத்துவங்கும் விஜிக்கும் சத்யா மேல் காதல். ஆரம்பத்தில் எல்லாம் அழகாக நகர்ந்தாலும், விஜியின் ஐஏஎஸ் கனவு குறுக்கே வருகிறது. பரீட்ச்சைக்கு தயாராகும் விஜியின் முனைப்பை, தன்னிடமிருந்து விலகுகிறாள் என நினைத்துக் கொள்கிறான் சத்யா. அந்த பொஸசிவ்நெஸ் இவர்களின் காதலை என்ன செய்கிறது? விஜியின் ஐஏஎஸ் கனவு என்ன ஆனது? தான் யார் என்ற அடையாளத்தை தேடும் சத்யா தெரிந்து கொள்வதென்ன? இதெல்லாம் தான் 29 படத்தின் மீதிக்கதை.
வழக்கமான கதைதான் என்றாலும், அதை பத்து சேப்டர்களில் பிரித்து கவிதை போல அழகாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். ஒரு காதல் கதையாக ஆரம்பித்து, அடையாளத்துக்கான தேடலாக நகர்ந்து, அரசியலையும் தொட்டு பல விஷயங்களை பேசுகிறார் ரத்னா.
முதன்மை பாத்திரமான சத்யாவாக விது, முடிந்த வரை அந்த பாத்திரத்தின் தாக்கத்தை கடத்த முயல்கிறார். ஒரு சைடில் தனுஷ், மறு சைடில் இயக்குநர் ரத்னாவின் சாயலில் தெரிந்தாலும், நடிப்பால் கவர தீவிரமாக முயற்சிக்கிறார். ஆனால் படம் முழுக்க ஒரே மாடுலேஷனில் பேசுவது, உணர்வுகளை பெரிதாக வெளிக்காட்டாமல் நடிப்பது என ஒரு சுமார் நடிப்பை கொடுத்திருக்கிறார். விஜி ரோலில் வரும் ப்ரீத்தி அஸ்ராணி படம் துவங்கி கொஞ்ச நேரம் குறும்புக்கார ஹீரோயினாக, பின்னர் டிப்ரஷனாக என நல்ல மாற்றங்களை காட்டி நடித்திருக்கிறார். ஹீரோ ஃபிரெண்ட் ரோலில் அவினாஷ், திமிர்பிடித்த பணக்கார இளைஞர் ரோலில் மாஸ்டர் மகேந்திரன், ஹீரோ அம்மாவாக ஆதிரா, ஹீரோயின் அம்மாவாக சிந்து ஷ்யாம் போன்றோருக்கு மிக வழக்கமான வேடங்கள், அவர்களும் கொடுத்த வேலையை முடிக்கிறார்கள். இன்ஸ்ட்டா பிரபலம் செஹான்ஸ் ஃபாத்திமாவுக்கு கதையில் வேலையில்லை, Blink Miss ரோலில் வந்து போகிறார்.
தன் அடையாளம் என்ன என்பதை சிந்திக்கும் இளைஞன், ஒரு பெண்ணின் மீதான காதலினூடாக தன்னை பற்றி அறிந்து கொள்ள முயலும் அழகான ஒன்லைன். அதற்குள் காதல், காமம், காதலின் பொருட்டு உருவாகும் தேவையற்ற மன அழுத்தங்கள், பயத்திலிருந்து வெளியே வரும் முயற்சிகள் எனப் பல விஷயங்களை உள்ளே சேர்த்து சொல்லி இருக்கிறார்கள். ஒரு டைரியை எடுத்து இஷ்டத்துக்கு புரட்டி புரட்டி கோர்வை இல்லாமல் படித்தாலும், ஒரு கோர்வையான கதை வருவது போன்ற ஒரு திரைக்கதையும் கவனிக்க வைக்கிறது.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்துக்குள் ஒரு இயல்புத்தன்மையை சேர்க்கிறது. புரொப்போசல் காட்சியை சிங்கிள் டேக்கில் எடுத்திருந்த விதமும் ரசிக்க வைக்கிறது. இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம் ஷான் ரோல்டனின் இசை. பூ பாடல், சீலே சீலே பாடல்கள் இதம், பின்னணி இசை மூலம் படத்தின் உணர்வு அனைத்தையும் சிறப்பாக கடத்துகிறார். சதீஷ் குமாரின் படத்தொகுப்பு படம் நெடுக கோர்வையாக கதை இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
இந்தப் படத்தின் பிரச்சனை என்றால், படத்தில் எல்லா விஷயமும் மிகைப்படுத்தி இருக்கிறது அல்லது இயல்புத்தன்மை இல்லாமல் இருக்கிறது. அதனால் எமோஷனலாக இந்தப் படத்துடன் ஒன்றவே முடிவதில்லை. எல்லா காட்சியின் துவக்கம், முடிவில் வரும் வாய்ஸ் ஓவர் படம் நெடுக ஒலித்துக் கொண்டே இருப்பது சோதிக்கிறது. ஹீரோ வாய்ஸ் ஓவரில் மட்டுமே எல்லா உணர்வுகளையும் கமிட் செய்ய நினைக்கிறார். இப்படி எல்லா உணர்வுகளையும் பேசி பேசியே புரிய வைக்க நினைப்பது படத்தை மிகவும் அந்நியமான ஒன்றாக மாற்றுகிறது. இதில்லாமல் "ரோட்டுல செல வைக்கிற அளவுக்கு சாதிக்கலன்னாலும், வீட்டுல ஓல வைக்கிற அளவு சாதிச்சிருக்க" என படம் முழுக்க சில எதுகை மோனை வசனங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் பெங்களூர் காதலியிடம் வீடியோ காலில் பேசும் இளைஞன் சார்ந்த காட்சிகள் சோர்வளிக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தப் படம் எதை நோக்கி போகிறது என்றே தெரியாமல் Pointless ஆக போகிறது. திடீரென வரும் போராளி அவதாரம், ஹீரோயின் அப்பாவை வைத்து கொடுக்கும் சர்ப்ரைஸ் என என்னென்னவோ நடக்கிறது.
மொத்தத்தில் இந்தக் கதையை வித்தியாசமாக சொல்ல நினைத்தது போல, சுவாரஸ்யமாகவும் சொல்லியிருந்தால் அழகான அனுபவமாக இருந்திருக்கும்.

