ஆணவ கொலை அநீதி பேசும் பாரிஸ் கஃபே... எப்படி இருக்கிறது? | Paris Cafe Review
ஆணவ கொலை அநீதி பேசும் பாரிஸ் கஃபே... எப்படி இருக்கிறது?(1.5 / 5)
ஆணவ கொலையால் பாதிக்கப்படும் குடும்பம் பற்றிய கதை!
கௌதம் (குரு சோமசுந்தரம்) ஒரு மருத்துவர். அவரது மனைவி தாரா (அனுமோல்). அமெரிக்காவில் இருக்கும் இவர்களது மகள் ஒளி (அர்ச்சனா) திடீரென ஒரு நாள் தன்னுடைய அம்மா - அப்பா ஒரு சண்டையால் பிரிந்து வாழ்கின்றனர் என தெரிந்து கொள்கிறார். பிரச்சனை என்ன என்று தெரிந்து கொள்ள தன் பாய் ஃபிரெண்ட் கவின் (விஜய் விஷ்வா) உடன் இந்தியா வருகிறார். அவரது அம்மா, அப்பாவுக்கு இடையே என்ன பிரச்சனை? அதை சரி செய்ய இவர்கள் எடுக்கும் முயற்சிகள் கை கொடுத்ததா? என்பதெல்லாம் தான் பாரிஸ் கஃபே.
குடும்ப பின்னணியில், ஆணவக் கொலைக்கு எதிரான ஒரு கருத்தை பேசி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
அமைதியான மருத்துவராக, குடும்பத்திற்காக சில உண்மைகளிலிருந்து விலகிச் செல்லும் மனிதராகவும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது குரு சோமசுந்தரம் பாத்திரம். ஒருபுறம் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்; இன்னொருபுறம் நடந்த அநீதியை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரத்தை வெளிக் கொண்டுவர முயற்சிக்கிறார். அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்ணாக வரும் அனுமோல், கணவரின் சில முடிவுகளுடன் முரண்படுகிறார். கோபம், வலி, காதல், குடும்பத்தைப் பற்றிய அக்கறை என பல்வேறு உணர்வுகளை கடத்த முயற்சித்திருக்கிறார். ஆனால் ஏனோ குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடிப்பு படத்துக்கு வலு சேர்க்கவில்லை. மிகவும் மேலோட்டமான நடிப்பாகவே இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படத்தின் மேல் ஒரு எதிர்பார்ப்பும் நமக்கு உருவாகவில்லை. ஒரு மகளின் காதல் கதையாக துவங்கி, கணவன் மனைவி சண்டையாக நகர்ந்து, ஆணவ கொலையாக திரும்பி என இந்தக் கதை செல்லும் விதம் பெரிய அலைக்கழிப்பாக இருக்கிறது. அதிலும் இந்த சிக்களுக்கெல்லாம் துவக்க புள்ளியாக பாரிஸ் கஃபே ஒன்றில் இருக்கும் புகைப்படம் தான் காரணம் என்று சொல்வது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
குறிப்பாக சில இடங்களில் கதையின் வேகம் குறைகிறது. சமூகப் பிரச்சனையை வலுவாக சொல்லும் நோக்கம் இருந்தாலும், சில காட்சிகள் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.
சதீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு இயல்பாக காட்சிகளை கொடுக்க முயற்சிக்கிறது. ஆனால் முக்கால்வாசி படம் க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்டிருப்பதால், எந்தக் காட்சியோடும் நம்மால் ஒன்றை முடியவில்லை. கே-வின் இசையும், பின்னணி இசையும் மிக பலவீனமாகவே இருக்கிறது.
மொத்தத்தில் படத்தில் சொல்ல விரும்பிய கருத்தில் இருந்த அழுத்தம், கதை, திரைக்கதையிலும் இருந்திருந்தால், நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும் இந்த பாரிஸ் கஃபே.

