வித்தியாசமான களம்.. வலுவான ஆட்டம்.. ’மண்டாடி’ விமர்சனம் | Mandaadi Review | Soori
வித்தியாசமான களம்... வலுவான ஆட்டம்!(3 / 5)
பாய்மரப் படகுப் போட்டி பின்னணியில் நட்பு, காதல், துரோகம் பேசும் படமே `மண்டாடி'
ராமநாதபுரம் பாய்மரப் படகுப் போட்டியில் முக்கியமான அணியாக இருக்கிறது முனி (சத்யராஜ்) தலைமையிலான முகவை மைந்தர்கள் அணி. அந்த அணியின் முக்கிய வீரர்களாக காளியும் (சூரி) சாட்டபுலியும் (சுஹாஸ்) இருக்கின்றனர். காளி அணியின் மண்டாடியாக, அதாவது கேப்டனாக இருக்கிறார். தொடர்ந்து கோப்பைகளை வென்று வரும் இந்த அணியில், நெருங்கிய நண்பர்களான சூரிக்கும் சுஹாஸுக்கும் இடையே ஏற்படும் உரசல் பிரச்னையாக மாறுகிறது.
அதன் பின்னர் நடைபெறும் சில சம்பவங்களால் படகுப் போட்டியிலிருந்தும், சொந்த ஊரிலிருந்தும் விலகிச் செல்கிறார் சூரி. ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவம் மீண்டும் அவரை அந்த ஊருக்கும், பாய்மரப் படகுப் போட்டிக்கும் அழைத்து வருகிறது. சூரி ஏன் ஊரை விட்டுச் சென்றார்? சத்யராஜுக்கு என்ன ஆனது? மீண்டும் சூரி போட்டிக்குத் திரும்ப வேண்டிய சூழல் என்ன என்பதே படத்தின் மையக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் களம். தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான பாய்மரப் படகுப் போட்டியை கதையின் மையமாக வைத்திருப்பது கவனம் ஈர்க்கிறது. அந்தப் போட்டி நடைபெறும் கடல், படகுகள், போட்டியாளர்களின் பதற்றம் என அந்த உலகத்தை நம்பும்படியாக உருவாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக, போட்டிக் காட்சிகள் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்துள்ளன.
சூரி, இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் அடுத்தகட்டத்திற்கு நகர்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளையும் மாஸ் தருணங்களையும் அவர் இயல்பாக கையாண்டிருக்கிறார். சுஹாஸின் வில்லத்தனமான கதாபாத்திரம் வழக்கமான சாயல் கொண்டிருந்தாலும், அவரது நடிப்பு அழுத்தமாக இருக்கிறது. ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள டப்பிங் குரலும், குரல் மாடுலேஷனும் கதாபாத்திரத்துடன் முழுமையாகப் பொருந்தவில்லை. மகிமா நம்பியார், ரவீந்திர விஜய், சத்யராஜ் தங்கள் நடிப்பின் மூலம் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.
முன்பின் தெரியாத ஒரு விளையாட்டை அறிமுகம் செய்வது, அதன் தொழில்நுட்பங்களைப் பாடம் எடுத்துக் கொண்டிருக்காமல் கதையோடு ஒட்டிய வகையிலேயே சுவாரஸ்யமாகச் சொல்வது எனக் கொடுக்கப்பட்டிருந்தது சிறப்பு.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் கதிர் படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறார். கொந்தளிக்கும் கடலில் நடைபெறும் படகுப் போட்டிகள், சண்டைக் காட்சிகள் மற்றும் முகவைப்பட்டினத்தின் அழகை பதிவு செய்த விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வரும் ‘மண்டாடி’ டைட்டில் ட்ராக் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையும் போட்டிக் காட்சிகளின் பரபரப்பை அதிகரிக்கிறது.
ஆனால் படத்தின் பலவீனம் அதன் உணர்வுப் பகுதி. ‘பாட்ஷா’ பாணியில் வரும் ‘இவர் யார் தெரியுமா?’ என்ற ஃப்ளாஷ்பேக் அணுகுமுறை படத்தை புதிதாக இல்லாமல், மிகவும் வழக்கமானதாக மாற்றுகிறது. அதைவிட முக்கியமாக, மகிமா–சூரி காதல், சத்யராஜ்–சூரி இடையேயான அன்பு, சுஹாஸின் மனமாற்றம் போன்ற முக்கியமான உணர்வுகள் பல இடங்களில் வசனங்கள் மூலமாக மட்டுமே சொல்லப்படுகின்றன.
அதற்கு முக்கியமான காரணம் சூரி பாத்திரத்துக்கு கொடுக்கப்பட்ட கவனம், சத்யராஜ், மகிமா, சுஹாஸ் என எந்த பிற பாத்திரங்களுக்கும் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் சார்ந்த காட்சிகளின் உணர்வு முழுமையாகப் பார்வையாளர்களுக்குச் சென்று சேரவில்லை. நட்பா, விசுவாசமா என நாயகனின் குழப்பமான மன ஓட்டம் முழுமையாகக் கையாளப்படவில்லை.
மொத்தத்தில், தொழில்நுட்ப ரீதியாக வலுவாகவும், வித்தியாசமான களத்துடன் உருவாகியிருக்கும் ஒரு engaging sports drama-வாக ‘மண்டாடி’ அமைந்துள்ளது. உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இன்னும் வலுவாக அமைந்திருந்தால் படம் இன்னும் சிறப்பான அனுபவமாக இருந்திருக்கும். இருப்பினும் பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து நல்ல பரபரப்பையும் பொழுதுபோக்கையும் வழங்கும் திரைப்படமாக ‘மண்டாடி’ கவனம் பெறுகிறது.

