ஜார்ஜ் குட்டி இம்முறை சிக்கினாரா? | த்ரிஷ்யம் 3 விமர்சனம் | Drishyam 3 Review | Mohanlal
ஜார்ஜ் குட்டி இம்முறை சிக்கினாரா?(3 / 5)
ஜார்ஜ் குட்டி குடும்பத்தினரை மீண்டும் பின்தொடரும் கடந்த காலம், இதுவே `த்ரிஷ்யம் 3' ஒன்லைன்.
ஜார்ஜ் குட்டி (மோகன் லால்) போன பாகத்தில் தயார் செய்த கதையை சினிமாவாக மாற்றி வெளியிட்டு அப்படம் மிகப்பெரிய ஹிட்டாகிறது. ஒரு பக்கம் தயாரிப்பாளராக வளர்ந்து இருக்க, இன்னொரு பக்கம் மகளின் திருமணத்துக்காக வரன் பார்த்து வருகிறார். இதேவேளையில் அவர் குடும்பத்தைத் தாக்க அடுத்த சிக்கல் சகாதேவன் (கலாபவன் சஜோன்) ரூபத்தில் தயாராகிறது. முதல் பாகத்தில் அக்குடும்பத்தால் தன் போலீஸ் வேலை உட்பட தனக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு எப்படியாவது பழி வாங்க ஆதாரங்களை திரட்டி வருகிறார். எல்லாம் சரியாகச் செல்வது போல் இருந்தாலும் தன்னை யாரோ பின்தொடர்கிறார்கள் என்பதை உணர்கிறார் ஜார்ஜ் குட்டி. இம்முறை ஜார்ஜ் குட்டி குடும்பத்துக்கு எதிராக வரும் சிக்கல் என்ன? அதிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க ஜார்ஜ் குட்டி செய்வதென்ன என்பதெல்லாம்தான் `த்ரிஷ்யம் 3'.
முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார். அதற்குத் தகுந்த விதத்தில் பல உணர்ச்சிகரமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. கூடவே இது முதல் இரு பாகங்களில் இருந்து முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது.
ஜார்ஜ் குட்டி ரோலில் வழக்கம்போல் அசத்தி இருக்கிறார் மோகன்லால். ஒவ்வொரு பாகத்திலும் அவரது நடிப்பைக் கவனிப்பது, நடிப்பைக் கற்க நினைப்போருக்கு ஒரு பாடம். மெல்லமெல்ல தன் குறும்புத்தனங்களில் இருந்து வெளியேறி மனதில் பெரிய பாரத்தைச் சுமந்தவாறு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்திருக்கிறார். எந்த நேரத்திலும் ஓர் ஆபத்தை எதிர்பார்த்து காத்திருக்கும், அதேசமயத்தில் தன் குடும்பத்தினருக்கு எதையும் தெரியப்படுத்தாமல் இருக்கும் உணர்வுகளை அத்தனை துல்லியமாக பிரதிபலிக்கிறார்.
குடும்பத்தினராக மீனா, அன்ஷிபா, எஸ்தர் கொடுத்த வேலையை கட்சிதமாக முடிக்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களுக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. இந்தப் பாகத்தில் வில்லனாக கலாபவன் சஜோன் மிக வழக்கமான வில்லன் ரோலில் வந்து மிரட்டுகிறார். அவருக்கான பழிவாங்கும் நோக்கம் சொல்லப்பட்டாலும், அதில் அழுத்தம் இல்லாதது சின்ன குறை. முரளி கோபி நடிப்பில் குறை இல்லை என்றாலும், விவேகம் படத்து விவேக் ஓபராய் போல ஹீரோவுக்கு பில்டப் மட்டும் கொடுத்துவிட்டுப் போகிறார். சித்திக் நடிப்பில் குறை ஏதும் இல்லை.
முன்பு சொன்னதபோல இந்தப் பக்கத்தில் புத்திசாலித்தனத்தை மையப்படுத்தாமல், குடும்பத்தைக் காப்பாற்றும் காரணம் என்றாலும், குற்றமசெய்த மனம் நிம்மதி இழந்தபோவதை மையப்படுத்தி இருக்கிறார் ஜீத்து ஜோசப். தன்னுடைய குற்றத்துக்கு என்னதான் நியாயங்களை ஜார்ஜ் சொன்னாலும், மெல்லமெல்ல அந்தக் குற்றம் அவனையே விழுங்கிக் கொண்டிருக்கும் அபாயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். மேலும் இந்தக் குற்றத்தை மறைக்கும் பணிக்கு இடையே எத்தனை குடும்பங்களை ஜார்ஜ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறார்கள். ஒரு க்ரைம் த்ரில்லரில், குறிப்பாக புத்திசாலித்தனத்துக்கும், திருப்பங்களுக்கும் புகழ் பெற்ற த்ரிஷ்யம் மாதிரியான ஒரு படத்தில், இப்படி ஒரு கோணத்தை காட்ட நினைத்தததற்கு நிச்சயம் ஜீத்து ஜோசப்பை பாராட்டலாம்.
ஆனால், படத்தில் இந்தக் கோணத்தை மட்டுமே வலுவாகக் கொடுத்துவிட்டு, அதைச் சுற்றி வரும் சிக்கல்கள் எல்லாவற்றையும் மிக வலுவில்லாததாகவும், செயற்கையாகவும் கொடுத்திருந்தது சற்றே படத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது. உதாரணமாக, கலாபவன் சஜோன் பாத்திரம் சொல்லும் பின் கதை, ஒரு திருமணம் சார்ந்த கேஸ் இவை எல்லாம் மிக மேம்போக்காகவே இருந்தது. த்ரிஷ்யம் என்றாலே டுவிஸ்ட்தானே என கடைசி 30 நிமிடத்தில் பல டிவிஸ்ட்களை வைத்திருந்த விதமும் அத்தனை சிறப்பாக இல்லை. கிட்டத்தட்ட ஜார்ஜ் குட்டியை குற்றவாளி கூண்டில் வைத்து அவர் செய்த செயலின் விளைவுகள் எத்தனை பேரைப் பாதித்திருக்கிறது என சொல்வதுதான் இந்தப் பாகத்தின் யோசனை. அதை மட்டும் வலுவாகச் சொல்லிவிட்டு, மற்ற சுவாரஸ்யங்களில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
மேலும் பின்னணி இசை படம் மொத்தத்தையும் சீரியல் தொனியிலேயே உணர வைக்கிறது. கண்டிப்பாக இது ஒரு நல்ல சீக்குவல்தான். ஆனால், எமோஷனலாக அழுத்தமாகவும், வில்லன்கள், டிவிஸ்ட் போன்றவற்றில் மேம்போக்காகவும் இருக்கும் சினிமாவாக முடிகிறது. அவற்றை இன்னும் மேம்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் `த்ரிஷ்யம் 4'க்கு லீட் வைத்து முடிகிறது படம். அதில் என்ன காத்திருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

