DNA REVIEW | குழந்தையை தேடும் தந்தை... எப்படியிருக்கிறது DNA ..?
DNA(3 / 5)
தொலைத்த குழந்தையை பெற்றோர்கள் மீட்டெடுக்கும் போராட்டமே இந்த DNA.
காதல் தோல்வியால் சிக்குண்டு, அதிலிருந்து மீண்டு கொண்டு இருக்கிறார் ஆனந்த். உளச்சிக்கலால் திவ்யாவுக்கு திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இரு வீட்டாராலும் வெறுத்து ஒதுக்கப்படும் இவர்களுக்கு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது. எல்லாச் சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்க, அது கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகிறது. குழந்தை எப்படி களவு போனது; இந்த குழந்தை மாபியாவுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்; இறுதியில் என்ன நடந்தது என்பதையெல்லாம் த்ரில்லர் பாணியில் சொல்கிறது இந்த DNA.
உளச்சிக்கல் கொண்ட பெண்ணாக நிமிஷா சஜயன். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் இந்திய நடிகர்களுள் முக்கியமானவர் நிமிஷா சஜயன். இந்தக் கதாபாத்திரமும் அதற்கு விதிவிலக்கல்ல. பிரமாதப்படுத்தியிருக்கிறார். குழந்தையை தொலைத்த கணத்தில் அது குறித்து தீர்க்கமாய் பேசுவது; குழந்தையை விட்டுவிட்டு வந்து அது குறித்து மன அழுத்தத்துடன் நடந்துகொள்வது ; அதீத அன்பை செலுத்துவது என திவ்யா கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். கமர்ஷியல் அதிரடி த்ரில்லர் படத்தில் தனக்கான இடம் குறைவு என தெரிந்தும், அதில் நிறைவாய் நடித்துக்கொடுத்திருக்கிறார். குழந்தையை தொலைத்துவிட்டு , அந்த வலியுடன் அதைத் தேடும் தந்தையாக அதர்வா. 'உங்க குழந்தையா' என கேட்கும் இடத்தில், பதில் சொல்லத் தெரியாது அழுது நிர்கதியாய் நிற்பது; உடைந்து அழுவது என சில இடங்களில் ஈர்க்கிறார். எமோஷனைவிட அதிரடி காட்சிகளே அதர்வாவுக்கு அதிகம். இவர்களுக்கு உறுதுணையாய் தோள் கொடுக்கும் காவல்துறை அதிகாரியாக பாலாஜி சக்திவேல். சேத்தன், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், ரித்விகா என நமக்கு பழகிய முகங்கள் அவர்களுக்கான கதாபாத்திரங்களை ஓக்கேவாக செய்திருக்கிறார்கள்.
குழந்தைக் கடத்தல் என்னும் எமோஷனல் கான்செப்ட்டில் த்ரில்லர் கலந்து கொடுத்திருக்கிறார் நெல்சன் வெங்கடேசன். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா, DNA என படத்துக்கு படம் மாறுபட்ட கதைக்களம் யோசிக்கும் நெல்சனுக்கு வாழ்த்துகள். தவறு செய்பவர்களுக்கு தண்டனை காலத்தில் தாமதம் இருக்குமே ஒழிய அவர்கள் ஒருநாளும் அதிலிருந்து தப்பித்துவிட முடியாது என்கிற ஒன்லைனுடன் தொடங்கும் படம் அதன்வழியே நீள்வது அழகு, நெல்சன் அதிஷா கூட்டணியில் சில வரிகள் ஷார்ப். எல்லோரும் நக்கல் செய்யும் ஒரு பெண் தீர்க்கமாய் ஒரு விஷயத்தை சொல்வதும்; பொதுப்புத்தியில் சரியான நபர்கள் என முன்னிலைப்படுத்தப்படுபவர்கள் ஒரு கணம் கலங்கி நின்று விழிப்பதையும் இணைத்த இடம் சூப்பர். மருத்துவமனைகள் போன்ற டெக்னாலஜி குறைவாக அப்கிரேட் செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் ஆபத்துக்களை சொன்ன இடம் சிறப்பு. அதே சமயம், தடுப்பூசி குறித்து புரிதல் போதாமையில் ஆரம்பித்து, முக்கிய வில்லன் யாரிடம் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் வரை இரண்டாம் பாதியில் ஆங்காங்கே குழப்பம்.
ஐந்து பாடகர்கள், ஐந்து இசையமைப்பாளர்கள் புதுவித முயற்சி என்பதாகவே இருக்கிறது. படத்தில் வரும் குடி பாடலையும், பார் பாடலையும் மொத்தமாய் வெட்டி எறிந்திருக்கலாம். காயத்ரி ஷங்கரை வைத்து வரும் அந்த பாடல் எல்லாம் படத்தின் ஓட்டத்தை மொத்தமாய் சிதைத்துவிடுகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம். த்ரில்லர் படங்களுக்கு தானொரு மாயாஜால வித்தகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ஜிப்ரான். காலி கட்டிடப் உச்சியில் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நடக்கும் அந்த சண்டைக் காட்சியில் டான் அசோக்கின் உழைப்பு தெரிகிறது.
தேவையற்ற பாடல்களையும் தயவு தாட்சண்யமின்றி நீக்கியிருந்தால், இந்த த்ரில்லர் சீட் நுனி த்ரில்லராய் மாறியிருக்கும்.