KUBERAA REVIEW | குபேரா படம் எப்படி இருக்கு?
KUBERAA (3 / 5)
இந்தியாவில் அரசாங்க ஆராய்ச்சியின் முயற்சியால் கண்டுபிடிக்கப்படும் எண்ணெய் வளத்தை மீது தொழிலதிபரான நீரஜ் (ஜிம் சர்ப்) கண் விழுகிறது. 15 ஆண்டுகளுக்கான எண்ணெய் வளம் என்பதால் அதை தன் கைகளுக்கு வரவைக்க, அரசு அதிகாரிகளோடு பேரம் பேசுகிறார். கருப்பாகவும், வெள்ளையாகவும் 1 லட்சம் கோடி விலை பேசப்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதைக் கொண்டு சேர்க்க நியமிக்கப்படுகிறார் தீபக் (நாகர்ஜுனா). பணத்தை பினாமி மூலம் கொண்டு சேர்ப்பது என திட்டம் தீட்டப்பட, தேவா (தனுஷ்) உட்பட நான்கு பிச்சைக்காரர்களை வெவ்வேறு ஊர்களில் இருந்து மும்பை அழைத்து வருகிறார் தீபக் . ஒரு பக்கம் பணத்தாசை பிடித்த முதலாளி, இன்னொரு பக்கம் சுயலாபத்துக்காக தீமைக்கு துணை போகும் தீபக், இவர்கள் இடையே சிக்கி போராடுகிறார் தேவா. ஒருகட்டத்தில் தேவா உயிருக்கே ஆபத்து வர அதன் பின் என்ன ஆகிறது? தீபக் என்ன செய்கிறார்? நீராஜின் திட்டம் என்ன ஆகிறது? என்பதெல்லாம் தான் குபேரா மீதிக்கதை.
படத்தின் பலம் நிச்சயமாக தனுஷின் அழுத்தமான நடிப்பு. பிச்சைக்காரராக வெள்ளந்தியாக சிரிப்பது, பயந்து நடுங்குவது, உண்மை தெரிந்ததும் கலங்கி பேசுவது, ராஷ்மிகாவிடம் ஆதரவு கேட்டு சுற்றி சுற்றி வருவது எனப் பல காட்சிகளில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அடுத்த பலம் சேகர் கம்முலாவின் எழுத்து. பணக்காரரின் பேராசை, நேர்மையான அதிகாரியின் மனமாற்றம், தனுஷின் கதாபாத்திர வடிவமைப்பு என பலவற்றை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு உடல் எரிக்க பெட்ரோல் இல்லாமல் தவிக்கும் ஒருவன், எண்ணை வளத்தை கைப்பற்ற நினைக்கும் ஒருவனை எப்படி எதிர்க்கிறான் என்ற முரண் சிறப்பு.
நேர்மையாக தைரியமாக இருப்பது, பணத்திற்குதான் மதிப்பு என நினைத்து தவறான பாதைக்கு செல்வது, மெல்ல மெல்ல மோசமான ஒருவனாக மாறுவதை நினைத்து தடுமாறுவது என பல உணர்ச்சிகளை சிறப்பாக காட்டியிருக்கிறார் நாகர்ஜூனா. ராஷ்மிகா மந்தனா தன் காதலனை நினைத்து அழுவது; தனுஷை சமாளிக்க முடியாமல் கத்துவது; அதே சமயம் அவர் மேல் உள்ள பரிதாபத்தையும் கைவிட முடியாமல் திணறுவது; சில காமெடி காட்சிகள் என ரசிக்க வைக்கிறார். அவரின் சில ஒன் லைனர்கள் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. ஜிம் சர்ப் வழக்கமான கார்ப்பரேட் முதலாளி வேடம் என்றாலும் முடிந்தவரை சிறப்பாக நடித்திருக்கிறார். ஏழ்மையை கண்டாலே வெறுப்பது, பிச்சைக்காரர்களை ஏளனமாக பார்ப்பது என அவர் காட்சிகள் சிறப்பு. துணைப்பாத்திரங்களில் சுனைனா, பாக்யராஜ், ஹரீஷ் பெரேடி ஆகியோர் நல்ல பங்களிப்பை கொடுத்துள்ளனர்
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, படத்தின் தரத்தை கூட்டுகிறது. குப்பை கிடங்குகள், மின்னும் கட்டிடங்கள் என எதுவானாலும் அதன் இயல்புடன் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் போய் வா போய் வா பாடல் Vibe கூட்டுகிறது. அதன் நடன வடிவமைப்பும் அட்டகாசம். பின்னணி இசையில் படத்தின் பரபரப்பை கூட்டுகிறார். சில எமோஷன் காட்சிகளிலும் அவரது இசை தனித்து தெரிகிறது.
படத்தின் குறைகள் என பார்த்தால், முதல் மைனஸ் நீளம்தான். முதல் பாதியில் பரபரப்பான காட்சிகள் ஏதும் இல்லை என்றாலும், சுவாரசியமாக நகர்கிறது கதை. ஆனால், இரண்டாம் பாதி நீண்டு கொண்டே செல்கிறது. தனுஷ் ஓட நாகர்ஜுனா துரத்த, நாகர்ஜுனா துரத்த தனுஷ் ஓட என்பது மட்டுமே இரண்டாம் பாதியாக இருக்கிறது. அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை என்பது சலிப்படைய வைக்கிறது. மேலும் தனுஷ் எதற்காக அழைத்துவரப்படுகிறார், என்ன நடக்கிறது என்பதெல்லாம் நமக்கு முன்பே சொல்லப்படுவதால், பின்கதையில் எந்த ஆச்சர்யமும் நமக்கு ஏற்படவில்லை. அதோடு சில பாத்திரங்களை அப்படியே நிற்கதியாய் விடுவதும் மைனஸ். நாகர்ஜுனா பாத்திரம் பல விஷயங்கள் செய்தாலும், அவருடைய பாத்திரம் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படுத்தவில்லை, அவரின் மனமாற்றம் தொடர்பான விஷயங்களும் தடாலடியாகவே இடம்பெற்றுள்ளன.
தமிழில் படம் டப் செய்யப்பட்டுள்ளது பல இடங்களில் தெரிகிறது. அதை விட சிக்கல் என்ன என்றால், நாகர்ஜுனா பாத்திரம் சில காட்சிகளில் ஒரு குரலிலும், வேறு காட்சியில் இன்னொரு குரலிலும் பேசுகிறது. மிமிக்ரியே செய்யாமல் பல குரலில் பேசுகிறார் நாகர்ஜுனா. சாயாஜி ஷிண்டே கதாபாத்திரத்திற்கும் இதே சிக்கல் தான். இவை படத்தில் பெரிய இடைஞ்சலாக இருந்தது.
பணம் சார்ந்தும், மனிதர்களின் பேராசை சார்ந்தும் பேசுவது போல் படத்தை துவங்கி பின் ஒரு சாதாரண த்ரில்லராக மாறுகிறது படம். க்ளைமாக்ஸ்க்கு முன்பு "நாங்கள் எல்லாம் மனுஷங்க இல்லையா சார்?" எனக் கேட்கும் போது வரும் அழுத்தம், படம் மொத்ததில் இல்லை. தனுஷ் போனில் பேசுவதற்கு முன்பு வரை காட்சிகள் சற்று சலிப்பையே ஏற்படுத்துகிறது. எழுத்தில் இவற்றை இன்னும் சரி செய்திருந்தால் முக்கியமான படமாக மாறியிருக்கும்.
மொத்தத்தில் சுவாரஸ்யமாக துவங்கி, சற்று சலிப்பாக நகர்ந்து, இறுதியில் சுவாரஸ்யமாக முடிகிறது படம் . கண்டிப்பாக ஓரளவு நல்ல பொழுதுபோக்கு படம். தியேட்டரில் ஒரு விசிட் அடிக்கலாம்.