alangu Movie Review
alangu Movie ReviewAlangu

Alangu review | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... எப்படி இருக்கிறது அலங்கு..!

அலங்கு விமர்சனம்: மனித உரிமை, சமத்துவம், சமூக சிக்கல்களை பேசும் படம்!
Published on
Alangu Movie Review(3 / 5)

தன் மகளே உலகம் என நினைக்கும் ஒருவன்; உலகில் இருக்கும் எல்லா உயிர்க்கும் மதிப்பளிக்க வேண்டும் என நினைக்கும் ஒருவன். இந்த இருவரும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதே அலங்கு திரைப்படத்தின் ஒன்லைன்.

மலைவாழ் மக்களில் இருந்து முதல் தலைமுறை பட்டதாரி என்கிற கனவுடன் கல்லூரிக்குச் செல்கிறார் தருமன். கல்லூரியில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் கூலி வேலைக்கு கேரள செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார். தன் சகாக்களுடன் கேரள ரப்பர் தோட்டங்களுக்குப் பயணப்படுகிறார். கேரளாவில் நகராட்சித் தலைவராக இருக்கிறார் செம்பன் வினோத். ஆசையாய் பிறந்த அன்பு மகளே உலகம் என வாழும் ஒருவர். மகளுக்கு ஏற்படும் அசாம்பாவிதத்தால் எடுக்கும் ஒரு முடிவு ஒட்டுமொத்த நகரத்தையும் அலற வைக்கிறது. பித்துப் பிடித்தது போல் அடியாட்கள் சுற்ற ஆரம்பிக்கிறார்கள். இந்த உலகில் பிறந்த எல்லோரும் வாழும் உரிமையுண்டு என நம்பும் தருமனுக்கும், செம்பன் வினோத்துக்கும் இடையே நடக்கும் போராட்டமே அலங்கு.

தருமனாக அறிமுக நடிகர் குணாநிதி. இயல்பாக நடித்திருக்கிறார். எமோசனல் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். நண்பர்களாக வரும் மாஸ்டர் அஜய்; மாமன் காளி வெங்கட் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு மத்தியில் கவனம் ஈர்க்கிறார் தாயாக வரும் ஸ்ரீரேகா. டப்பிங் சிக்கல்கள் இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். செம்பன் வினோத்துக்கு பெரிய வேலையில்லை. செம்பன் வினோத்தின் வலதுகரமாக வரும் ஷரத் அப்பானிக்கு நல்லதொரு வேடம்.

alangu Movie Review
BABY JOHN Review | சத்ரியன் டூ தெறி... தெறி டூ பேபி ஜான்... என்ன வித்தியாசம்..?

கேரளத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகள்; மலைவாழ் மக்களை ஏளனமாக பேசும் அரசு அதிகாரவர்க்கம்; கேரள காடுகளில் வேலை செய்யும் மனிதர்களுக்கு நேரும் கொடுமைகள் என சமகாலத்தில் நிகழும் பல்வேறு பிரச்னையில் இணைத்து திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் சக்திவேல். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என வாழ நினைக்கும் ஒருவனுக்கு இந்த இயற்கை தானே சில வழிகளை உருவாக்கிக்கொடுக்கும் என காட்டும் இடங்கள் நல்லதொரு சிறுகதை. உலகம் முழுக்க பாதைகளை உருவாக்கியது கால்கள் தான். ஏழைகளின் கால்தடமும், பணக்காரர்களின் கால்தடமும் என்னவாக பார்க்கப்படுகிறது என காட்சிப்படுத்தியிருப்பது அருமை. முதல் தலைமுறை டிப்ளமோ படிக்கும் கதாநாயகன் செருப்பு அணியக்கூடாது என்று சொல்லும் இடத்திலும்; காவல்துறை அதிகாரி ஏளனம் செய்யும்போதும்; உரிமை மறுக்கப்படும்போதும் கோபம் கொண்டு எழுவான். உண்மையில் படிப்பு ஒருவருக்கு சுயமரியாதையை கற்றுத் தரும் என காட்டியிருக்கும் காட்சிகள் மிகமுக்கியமானவை. நமக்கு ஒருவர் உலகமாய் இருப்பதாலேயே, உலகத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் நாமே உரிமையாளர் என்னும் போக்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது அலங்கு திரைப்படம். அதை சரியாகவும் கடத்தியிருக்கிறது.

' கடைசில பிரியாணி' திரைப்படத்தைப் போலவே அலங்கு திரைப்படத்தின் கதைக்களமும் இரண்டு மாநிலங்களை இணைத்து நடக்கிறது. லாட்டரி, கம்யூனிஸ்ட் கொடிகள் என தமிழ்நாடு சட்டென கேரளாவாக மாறும் காட்சிகள் அருமை. இரண்டு மாநிலங்கள் காடுகளின் வழி நடக்கும் கதையை அழகாகப் பதிவு செய்திருக்கிறது பாண்டிகுமாரின் கேமரா. படத்துக்கு பெரும் பலம் அஜீஸின் பின்னணி இசை. கோவா படத்தின் 'இதுவரை ' பாடலின் மூலம் கவனம் பெற்ற அஜீஸுக்கு மீண்டும் கவனம் பெற்றுத் தந்திருக்கிறது அலங்கு திரைப்படம்.

கதையாக சுவாரஸ்யமாக இருந்தாலும், படத்தில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் வரும் காட்சிகளால் படத்தின் எமோசனல் கனெக்ட் அடி வாங்குகிறது. இரண்டாம் பாதியில் வரும் இந்தக் காட்சிகள் படத்தோடு ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது. காட்டிற்குள் நடக்கும் காட்சிகளில் VFX சுமாராக இருப்பது மேலும் படத்தை கீழிறக்குகிறது.

நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்படம் என்கிற வகையில் திருப்திப்பட்டுக்கொள்கிறது இந்த அலங்கு.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com