BABY JOHN Review | சத்ரியன் டூ தெறி... தெறி டூ பேபி ஜான்... என்ன வித்தியாசம்..?
Baby John (1.5 / 5)
மாணிக்கமாக அமைதியாய் வாழ்கிறார் ஜான், அவரின் சத்`தெறி'யன் பிளாஷ்பேக் என்ன? என்பதே ஒன்லைன்.
விஜய் நடிப்பில் தமிழில் வெளியான `தெறி' பட இந்தி ரீமேக் `பேபி ஜான்'. ஒருவேளை `தெறி'யாதவர்கள் இருந்தால், அவர்களுக்கு கதைச் சுருக்கம் இதோ. மகள் குஷி (ஸாரா)யுடன் கேரளாவில் அமைதியான முறையில் பேக்கரி நடத்தி வருகிறார் ஜான் (வருண் தவான்). எந்த வம்பு தும்புக்கும் போகாமல் பொறுமையே பெருமை என வாழும் ஜானின் வாழ்க்கையில், ஸ்கூல் டீச்சர் தாரா (வாமிகா கபி) மூலம் ஒரு சிக்கல் தேடி வருகிறது. அடியாட்கள் ஜானின் வீட்டை முற்றுகையிட்டு குழந்தைக்கு ஆபத்து விளைவிப்பதாக மிரட்ட, டென்ஷானாகும் ஜான் எல்லோரையும் பொளந்து கட்டுகிறார். யார் இந்த மாணிக்கம்? இவரின் பாட்ஷா கதை என்ன? என்பதே பேபி ஜானின் மீதிக்கதை.
`தெறி'கதையில் இந்திக்காக கூடுதல் மசாலாக்களை தெறிக்கவிட்டு, இலையில் பரிமாறியிருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும், விஷுவலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. எந்தக் காட்சியிலும் செலவு பற்றி எந்த கவலையும்படாமல் இயக்குநரின் விஷனுக்கு கை கொடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஒரிஜினல் படத்தின் முக்கியமான காட்சிகளை அதே தரத்துடன் எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக ஹீரோ - அவரின் அம்மா சார்ந்த ஜாலி காட்சிகள், மாணவி ஒருவர் காணாமல் போகும் காட்சி, இடைவேளை காட்சி என சில காட்சிகளை சொல்லலாம். கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஜாலியான காட்சிகள், ரொமான்ஸ், சென்டிமென்ட், டான்ஸ் என கமர்ஷியல் பட பேக்கேஜில் குறை ஏதும் இல்லை.
கான்ஸ்டபிள் ராம் கதாப்பாத்திரத்தில் வரும் யாஷ்பால் சர்மாவுக்கு ஒரே ஒரு முக்கியமான காட்சி இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார். அக்காட்சி அழுத்தமாக இருக்கக் காரணம் அவரது நடிப்புதான். வாமிகா கபிவுக்கு முக்கியமான காட்சி ஏதும் இல்லை. ஆனால் வரக் கூடிய காட்சிகளில் என்ன தேவையோ அதை செய்துவிட்டுப் போகிறார். மகள் கதாப்பாத்திரத்தில் வரும் ஸாரா நடிப்பும் சிறப்பு.
தமன் மாஸ் காட்சிகளுக்கு கொஞ்சம் ஓவர் டைமாக ஒர்க் செய்திருக்கிறார். ஆனால் இரைச்சல் ஹெவி ஆகிவிட்டது ஒரு குறை. ஆனாலும் Nain Matakka, Beast Mode, Bhayam ஆகிய பாடல்கள் அட்டகாசம். நடிப்பு, தொழில்நுட்ப விஷயங்கள் தாண்டி, இப்படத்தில் பாராட்ட பெரிதாக ஒன்றும் இல்லை. அட்லீ - காளீஸ் இருவரும் தெறி படத்தை எக்ஸ்பேண்ட் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ப்ராசஸில் படத்தை ஓவராக இழுத்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் "கண்டிப்பாக நம்மை காப்பாற்ற யாராவது வருவார்கள்" என இரு பெண் சொல்வதாக படம் துவங்குகிறது. அதிலேயே அந்த அரதப் பழைய ட்ரீட்மெண்ட் புரிந்துவிடும்.
ஒரு க்ரைம் சிண்டிகேட், பெண்களை கடத்தி விற்கிறது, எனவே ஹீரோ அவர்களை எதிர்க்க ஒரு சவால் இருக்கிறது. டீச்சர் தாராவுக்கு இன்னொரு ஷேட் உள்ளது, காமெடி செய்து கொண்டிருக்கும் கான்ஸ்டபிளுக்கு ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. ஆனால் இவற்றின் மூலம் படத்தில் சுவாரஸ்யமாக நடப்பது என்ன? வெறுமனே பட்ஜெட் இருக்கிறது, எடுக்க முடியும் என்பதால் மட்டும் எடுக்கப்பட்ட காட்சிகளாக அவை இருந்தன.
படத்தின் முக்கியமான பிரச்சனையே லீட் ரோலில் நடித்திருக்கும் வருண் தவான் தான். இதற்கு முன்பு `பத்லாபூர்', `அக்டோபர்' படங்களில் அவர் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், ஒரு மாஸ் படத்தில் அவரால் பொருந்திப் போக முடியவில்லை என்பது திரையில் அப்பட்டமாக தெரிகிறது. ஆக்ஷன் காட்சியோ, ஜாலியான காட்சியோ, மாஸ் காட்சியோ எதிலும் ஒரு சுவை சேர்க்காமல், மிக தட்டையான நடிப்பை மட்டுமே கொடுக்கிறார்.
ஏற்கெனவே பார்த்த படத்தின் ரீமேக் படத்தை பார்க்கும் போது, நாம் பார்ப்பது ஒரு படமல்ல. நம்மையே அறியாமல் ஒரிஜினல் படமும் நம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். தொடர்ச்சியாக ஒவ்வோரு காட்சியையும் நாம் ஒப்பிட்டு கொண்டே இருப்பதை தவிர்க்க முடியாது. தெறி தான் தமிழ் சினிமாவில் மிக சிறந்த மாஸ் படம் என சொல்லுவது நோக்கமல்ல. ஆனாலும் தெறி சிறப்பான பொழுதுபோக்குப் படம், மீண்டும் மீண்டும் பார்க்குமளவுக்கான ரிப்பீட் வேல்யூ உள்ள படம். ஒப்பீட்டில், தெறியில் இருந்தது, எது பேபி ஜானில் மிஸ் என்றால் பார்த்து பார்த்து சலித்த கதைதான் என்றாலும், அதற்குள் இருந்த சுவாரஸ்யங்கள் தெறியில் ஏராளம். அவை எல்லாம் பேபி ஜானிலும் உண்டு என்றாலும், அதில் இருந்த எக்ஸ்டரா சுவை எல்லாம் மிஸ்ஸிங்.
தெறி படத்தில் மாஸ் காட்சியோ, நகைச்சுவை காட்சியோ, டயலாக் டெலிவரியோ எல்லாவற்றிலும் விஜயின் ஒரு எக்ஸ்டரா உழைப்பு அந்த காட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். "இது அரசு அதிகாரியோட அரசாங்க வாகனம்" என்பதை காமெடியான மாஸ் டயலாக்காக வெளிப்படுத்துவது, அடுத்த காட்சியிலேயே சமந்தாவுக்கு லிஃப்ட் கொடுப்பது என அவரது நடிப்பு காட்சிக்கு வலு சேர்க்கும். அது போன்ற ஒரு கூடுதல் சுவாரஸ்யம் தான் பேபி ஜானில் மிஸ்ஸிங்க்.
மொத்தத்தில் இது மிக சுமாரான ஒரு ரீமேக். ஒருவேளை தெறி படத்தை மறந்துவிட்ட அல்லது அது பற்றி தெரியாத நபர் நீங்கள் என்றால் படம் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்பு உண்டு.