ஆங்கில வெப்சீரிஸில் அறிமுகமாகும் சித்தார்த்! | Unaccustomed Earth | Siddharth
இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருபவர் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் நடித்து கவனம் ஈர்த்தார். சினிமா, வெப்சீரிஸ் போன்றவற்றில் அழுத்தமான பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, புதிய ஓடிடி தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார்.
அமெரிக்க எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பு 'Unaccustomed Earth'. இதனை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஆங்கில தொடர் ஒன்றை தயாரிக்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம். இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சித்தார்த். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமாண்டிக் கதை, இந்திய - அமெரிக்க சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படியான தொடராக உருவாகிறது.
மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் பொறுப்பான மனைவியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பருல் சவுத்ரி (ஃப்ரீடா பிண்டோ) தனது முன்னாள் காதலன் அமித் முகர்ஜியை (சித்தார்த்) நீண்ட நாள் கழித்து சந்திக்கும் போது அவள் வாழ்க்கை தடுமாறுகிறது. அமித் வேலை - காதல் இரண்டையும் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிறார். இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது அவர்கள் சார்ந்த சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கதை.
`3 Body Problem', `The Nevers' போன்ற தொடர்களில் எழுத்தாளராக பணியாற்றிய மாதுரி ஷேகர் இந்த தொடரின் எழுத்தாளராக பணியாற்றுகிறார். தொடரின் முதல் இரண்டு எபிசோட்களை `The Lunchbox', `Photograph' இயக்குநர் ரிதேஷ் பத்ரா இயக்குகிறார்.
இது குறித்து தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் நன்றிக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சித்தார்த். "பிரபஞ்சத்திற்கு நன்றி, என் வாழ்க்கை என்கிற கனவின் அடுத்த அத்தியாயத்திற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 'Unaccustomed Earth'ன் ஒரு பகுதியாக இருப்பதும், அத்தகைய அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றுவதும் பெருமைக்குரியது." எனக் குறிப்பிட்டுள்ளார்.