’மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக திரையங்குகளில் வெளியாகும் படங்களை சட்டவிரோதமாக பதிவுசெய்து இணையங்களில் வெளியிடுவது அல்லது கேபிள் டிவிகளில் வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.
இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான செவன் க்ரீன் ஸ்டூடியோவின் லலித்குமார் தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ’மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்திருக்கிறது.