’இந்த லேடீஸ் பர்ஸ் யாரோடது கண்டுபிடி..’ இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக மிரட்டும் மம்முட்டி பட டிரெய்லர்!
தமிழ் சினிமாவில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால், வெந்து தனிந்தது காடு முதலிய ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
இவருடைய இயக்கத்தில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு திரைப்படம், முழுவதுமாக கமலை வேறு ஜார்னரில் காட்டி ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றது. எப்போதும் படத்திற்காக கடின உழைப்பை போடும் கமல்ஹாசன், நடிப்பில் மட்டுமே நம்மை ஆக்கிரமித்திருப்பார். தொடர் கொலைகளை செய்யும் மருத்துவம் படித்த இரண்டு இளைஞர்களை கண்டறியும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வந்த திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தபடமாக மாறியது.
இந்நிலையில் கமல்ஹாசன் போன்ற ஒரு மிகப்பெரிய நடிகரை ஒர் புதுமையான விதத்தில் வெளிக்கொண்டுவந்த கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாரான மம்முட்டியை வைத்து அதேபோலான இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை மலையாளத்தில் உருவாக்கியுள்ளார்.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்..
பிரபல தமிழ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ”டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் லீனா, சித்திக், விஜய் பாபு மற்றும் விஜி வெங்கடேஷ் முதலியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியிருக்கும் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், விஷ்ணு தேவ் ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக லெவெல்லின் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பேற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லரை பொறுத்தவரையில், போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி தொடங்கும் மம்முட்டியிடம், ஒரு லேடீஸ் பர்ஸ் யாருடையது என கண்டுபிடிச்சு கொடுக்குறியா என்று ஒருவர் கேட்க, இது மிகவும் எளிமையான கேஸ் என கையிலெடுக்கும் மம்முட்டிக்கு அதை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. ஒரு பர்ஸ்ஸில் தொடங்கி 2 கொலைகள் என நீளும் கதையில், தொடர் கொலைகளை செய்யும் கொலையாளி யார் என்பதை மம்முட்டி கண்டுபிடித்தாரா இல்லையா என கதை பயணிக்கிறது. மம்முட்டி அவருக்கே உரிய காமேடி பிளஸ் சீரியஸ் பாணியில் மிரட்டியிருக்கிறார். டிரெய்லரை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.