வெற்றி என்பது என்ன? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த விளக்கம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ’மோனிகா’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ’கூலி’ படம் ஆகஸ்டு 14ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. விமர்சன ரீதியில் பின்னடைவு, படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் போன்றவை கூலியின் வசூலை பாதிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கூலி.
கோடிகளில் வசூல் கொடுத்தால்தான் வெற்றியா?
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்காக என்னால் கதை எழுத முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சக்சஸ் என்றால் என்ன என்பது குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “நான் துணை இயக்குநராக இருந்தபிறகுதான் இயக்குநராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நான் நினைச்சது நடக்கவே இல்ல. அந்தவழியில் பார்த்தால் நான் இன்னும் சக்சஸ் ஆகவில்லை.
வெற்றி என்பது அதுமட்டுமேதானா என்று கேட்டால் அதுவும் இல்லை, கோடி கோடியாக வசூல் கொடுப்பதுதான் வெற்றி என்பது இல்லை, பெரிய படமோ, சிறிய படமோ அதை எடுத்துவிட்டு மக்களுக்கு எடுத்துச்சென்றுவிட்டாலே ஒரு இயக்குநராக அது உங்களுடைய வெற்றிதான்” என்று பேசியுள்ளார்.
தற்போதைய வசூல் நிலவரப்படி கூலி திரைப்படம் இந்திய அளவில் 280 கோடி ரூபாயும், உலகளவில் 510 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.