அடேங்கப்பா... பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு பிப்ரவரியில் வெளியான அஜித் படங்கள் இவ்ளோ இருக்கா?
அஜித்தின் `விடாமுயற்சி' பட ரிலீஸ் தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வெளியீடாக வரவேண்டிய படம், பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது. இதற்கு முன் அஜித் நடித்து பிப்ரவரியில் வெளியான படங்கள் என்னென்ன, எதனால் பிப்ரவரியில் அவை வெளியானது எனத் தெரியுமா?
‘உன்னை தேடி’
அஜித்தின் ஆரம்பகால படங்களில் சுந்தர் சி இயக்கிய `உன்னை தேடி', துரை இயக்கிய `முகவரி' போன்ற படங்கள் பிப்ரவரியில் வெளியானவையே. அவர் பெரிய ஸ்டாராக வளர்ந்த பின் பிப்ரவரியில் வெளியான படங்கள் எதுவும் பிப்ரவரிக்கு என்று திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டவை அல்ல. ஜனவரி மாதத்திலும் பொங்கலுக்கும் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் பிப்ரவரி மாதத்தில் வெளியானவை.
ஜி
லிங்குசாமி இயக்கத்தில் அஜித் நடித்த படம் `ஜி'. பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் படப்பிடிப்பு நடந்ததால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடியாமல் போனது. பின்பு 2005 பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு, அப்போதும் முடியாமல், பிப்ரவரி 11 வெளியானது.
அசல்
சரண் இயக்கத்தில் அஜித் நடித்த படம் `அசல்'. இந்தப் படத்தின் கதையை சரண் மற்றும் யூகி சேதுவுடன் இணைந்து அஜித் எழுதினார். 2009 டிசம்பரில் படப்பிடிப்பு முடிந்ததால் 2010 பொங்கலுக்கு படத்தை கொண்டு வருபதற்கான வேலை நடந்தது. ஆனால் சில தாமதங்கள் ஏற்பட பிப்ரவரி 5ம் தேதிதான் படம் வெளியானது.
என்னை அறிந்தால்
கௌதம் மேனன் - அஜித் கூட்டணியில் உருவான படம் `என்னை அறிந்தால்'. முதலில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11 படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதத்தால் ஜனவரி 29 என சொல்லப்பட்டது. கடைசியாக பிப்ரவரி 5ம் தேதி வெளியானது.
வலிமை
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் `வலிமை'. 2020 தீபாவளி வெளியீடாக கொண்டுவர திட்டமிட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. கொரோனா உட்பட பல தடைகள் வந்ததால் தாமதமானது. மெல்ல மெல்ல நடந்த படப்பிடிப்பு ஆகஸ்ட் 2021ல் நிறைவடைந்தது. பொங்கல் லாங் வீக் எண்ட்டை குறிவைத்தாலும், பொங்கல் ரிலீஸை தவறவிட்டது `வலிமை'. பின்பு பிப்ரவரி 24 வெளியானது.
விடாமுயற்சி
`அஜித் 62' முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து, பின்னர் மகிழ் திருமேனிக்கு கைமாறியதில் துவங்கிய சிக்கல் பின்பு பல விதங்களில் தொடர்ந்தது. 2023 செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய படப்பிடிப்பு அஜித்தின் வேர்ல்ட்டு டூரால் தாமதப்பட்டது. மெல்ல மெல்ல நடந்த படப்பிடிப்பு 2024 டிசம்பரில் நிறைவடைந்தது. முதலில் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம், பின்பு வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. இப்போது இன்று வெளியான டிரெய்லரில் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.