டாக்ஸிக், ஜன நாயகன்.. தொடர் நஷ்டத்தில் KVN Productions.. மீண்டெழுமா?
இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்து கவனம் ஈர்த்த தயாரிப்பு நிறுவனம் KVN Productions. தொழிலதிபரான வெங்கட் நாராயணா 2021ம் ஆண்டு `பொகரு' கன்னட படம் மூலம் விநியோஸ்தராக சினிமாவில் களம் இறங்கினார். தொடர்ந்து கணேஷ் நடித்த `சக்கத்' படம் மூலம் தயாரிப்பாளரானார். பின்னர் `By Two Love', `Cult' என நடுத்தர பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தார்.
சினிமாவில் பெரிய அளவில் படங்களை தயாரிக்க வேண்டும் என நினைத்தவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு மொழிகளிலும் உள்ள முக்கிய இயக்குநர்கள் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்படி அவர் ஒவ்வொரு மொழியிலும் முக்கியமான படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்தப் படங்கள் எதுவுமே கை கொடுக்கவில்லை என்பது தான் சோகம். 2026-ம் ஆண்டு KVN Productions-க்கு சோதனை நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கன்னடப் படங்களான ‘Cult’, ‘KD: The Devil’ ஆகியவை வெளியான நிலையில், இரண்டு படமும் மிகப்பெரிய வர்த்தக வெற்றியை பதிவு செய்யவில்லை.
`மஞ்சுமெல் பாய்ஸ்' சிதம்பரம் இயக்கிய ‘Balan’ விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றாலும், திரையரங்க வசூலில் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை. இதில் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது ‘Jana Nayagan’ தான். விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவான இப்படம், சென்சார் பிரச்சினை, வெளியீட்டு தாமதம் மற்றும் பைரசி கசிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்ற முன்பணத்தை திருப்பிக் கொடுத்து. ஒரு வழியாக பல தடைகளை கடந்து திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் கொடுத்தாலும், திரையரங்க உரிமையாளர்களுக்கே அதில் லாபம். தயாரிப்பாளர் பொறுத்தவரை லாபம் இல்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்தப் படங்கள் தான் இப்படி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 800 கோடி செலவில் யஷ் நடிப்பில் உருவான ‘Toxic’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தது KVN. ஆனால் இப்படமும் பலமுறை வெளியீடு தள்ளிப்போன பின்னர் ஆகஸ்ட் 2026-ல் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் ஆரம்ப வசூலுக்குப் பிறகு படத்தின் வசூல் வேகமாக குறைந்ததாக தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள்.
‘Jana Nayagan’, ‘Toxic’, ‘KD: The Devil’ ஆகிய மூன்று படங்களின் மொத்த முதலீடு ரூ.1,000 கோடியைத் தாண்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முதலீட்டின் மூலம் லாபம் எதுவும் இல்லை என்பது தான் இந்நிறுவனத்துக்கு விழுந்திருக்கும் பேரிடி. இப்போது KVN Productions-ன் அடுத்த நம்பிக்கை ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார், சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படமான ‘Haiwaan’. மலையாளத்தில் ப்ரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணியில் உருவான Oppam படத்தின் இந்தி ரீமேக் தான் இப்படம்.
ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி அல்லது தோல்வியை சில படங்களின் பாக்ஸ் ஆபிஸ் முடிவுகளை வைத்து மட்டும் தீர்மானிக்க முடியாது. KVN Productions இன்னும் சிவராஜ்குமார் நடிக்கும் Bail, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் `Kaaka' போன்ற படங்கள் தயாராகி வருகின்றது. அந்தப் படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், தற்போது பேசப்படும் இந்த ‘flop streak’ முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. பெரிய பட்ஜெட்… பெரிய நட்சத்திரங்கள்… ஆனால் தொடரும் சறுக்கல்... KVN Productions-ன் அடுத்த படங்கள் இந்த நிலையை மாற்றுமா என்பதுதான் இப்போது திரையுலகின் எதிர்பார்ப்பு.

