’கமலுக்காக படையப்பா 2 பண்ண நினைத்தோம்.. ஒருநாள் உருவாகலாம்’ - கேஎஸ் ரவிக்குமார்
படையப்பா 2 குறித்து கேஎஸ் ரவிக்குமார் பேசியதில், கமல்ஹாசன் அவர்களுக்காக படையப்பா 2 திரைப்படத்தை ஒரு ஹாரர் கதையாக உருவாக்க முயற்சித்ததாகவும், ரஜினிகாந்த் அதனை தற்போதைய சூழலுக்கு பொருத்தமில்லை என மறுத்ததாகவும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ரஜினியின் 25வது ஆண்டின் போது அவர் உருவாக்கிய படம் `படையப்பா'. கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்தப்படம் ரஜினியின் சினிமா கரியரில் பக்கா கமர்சியல் படமாக கோலோச்சியது. இப்படத்தின் பெரிய வெற்றி ரஜினியின் புகழை பெரிய அளவுக்கு கொண்டு சேர்த்தது. அதில் நடித்த நடிர்களின் புகழும் உயர்ந்தது.
இந்தசூழலில் கடந்தாண்டு டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளில் ரீரிலீஸ் செய்யப்பட்ட படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
இந்நிலையில் தான் படையப்பா 2 திரைப்படம் உருவாக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்தப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்திற்காக பண்ண நினைத்ததாகவும் கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். ரீரிலீஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்குபிறகு உருவாக்கப்பட்ட படையப்பா 2 கதையை ரஜினி வேண்டாம் என மறுத்துவிட்டதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ள படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். படத்திற்கு தர்மன் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தசூழலில் படையப்பா 2 குறித்து பேசியிருக்கும் கேஎஸ் ரவிக்குமார், “நாங்கள் படையப்பா 2 குறித்து விவாதித்தோம். கமல்ஹாசன் அவர்களுக்காக கூட அதனை உருவாக்க விரும்பினோம். நீலாம்பரி இறந்துவிட்டதால் அவர் மறுஜென்மம் எடுத்து வரும் ஒரு ஹாரர் கதையாக உருவாக்கினோம். கதையை கேட்ட ரஜினிகாந்த் சார், நன்றாக இருக்கிறது என்றார். அந்த சமயத்தில் படையப்பா ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
Gen Z தலைமுறையினரும் படத்தை ரசிப்பதை கவனித்த ரஜினி சார், நாம் எழுதிய திரைக்கதை தற்போதைய சூழலுக்குப் போதாது என்றார். இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு ஒரு இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்றார். தற்போது அவர் பிற படங்களில் பிஸியாக இருக்கிறார். இறைவனின் அருளால், எதிர்காலத்தில் இந்த இரண்டாம் பாகம் உருவாக்கக்கூடும்" என பேசியுள்ளார்.

