கவியூர் பொன்னம்மா காலமானார்! சுவாசத்தை நிறுத்திக்கொண்ட ‘அம்மா’.. மலையாள சினிமாவுக்கு பேரிழப்பு
குறிப்பாக, மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோருக்கு பல திரைப்படங்களில் அம்மாவாக நடித்து, பலரது நெஞ்சங்களிலும் இடம் பிடித்தவர்தான் கவியூர் பொன்னம்மா. பல லட்சம் நெஞ்சங்களில் இடம்பிடித்த கவியூர் பொன்னம்மாவின் உயிர் இன்று மருத்துவமனையில் சிகிச்சையின் போது பிரிந்துள்ளது.
ஒரு அம்மா பாத்திரம், அதுவும் பலருக்கும் பிடித்த பாத்திரம் என்றால், அதை ஏற்று நடிப்பவர் பெரும்பாலும் நேர்மறையான பாத்திரங்களையே ஏற்று நடிப்பார்கள். ஆனால், கவியூர் பொன்னம்மா அதற்கு விதிவிலக்கு. வில்லத்தனமான பாத்திரமும் சரி, அழ வைக்கும் emotional அம்மா பாத்திரமாக இருந்தாலும் சரி, தனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் அதில் நான் தான் கிங் என்றபடி நடிப்பில் மிரட்டுபவர்தான் கவியூர் பொன்னம்மா.
சுமார் 1,000 படங்களில் நடித்துள்ள கவியூர் பொன்னம்மா, தனது 14 வயதிலேயே திரைத்துறையில் நுழைந்திருந்தார். 1945ம் ஆண்டு பிறந்தவர், சிறு வயதிலேயே பாடல், இசையின் மீது நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். அப்படி, தனது 12வது வயதில் இசையமைப்பாளர் தேவராஜனால் பாட அழைக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவர் பாடிய முதல் பாடல்தான் மூலதனம். அந்த சமயத்தில், நாடக கலைஞர்களிடையே, ஒரு பாத்திரத்தை நடிப்பதற்கு ஆள் இல்லாதபோது, எதேச்சையாக அங்கிருந்த பொன்னம்மா நடித்து கொடுத்துள்ளார். அப்படி தொடங்கிய நடிப்புதான், பின் நாளில் மலையாள சினிமாவின் ஆதர்ச அம்மாவாக அவரை மாற்றியது.
சுமார் 40 வயதில் இருப்பவர்கள் அம்மா பாத்திரத்தை ஏற்று நடித்து பார்த்திருப்போம். ஆனால், கவியூர் பொன்னம்மா தனது 20 வயதிலேயே பழம்பெரும் நடிகர் சத்யனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். தொடர்ந்து, பிரேம் நசீர், சோமன், மம்மூட்டி, மோகன்லால் என்று மலையாள சினிமாவின் முன்னணி நாயக நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார். இதில், நடிகர் மொஹன்லாலுக்கு அம்மாவாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
60 களிலேயே நடிக்கத் தொடங்கியவர் சுமார் 60 ஆண்டுகால திரைப்பயணித்தில் பலருக்கும் பிடித்த நட்சத்திரமாக மாறியுள்ளார். வயது மூப்பு காரணமாக 2022ம் ஆண்டில் இருந்து நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர், உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். வயது மூப்பு தொடர்பான பிரச்னையோடு, புற்றோய் பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சூழலில்தான் மருத்துவமனையிலேயே அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. அவருக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பல தசாப்தங்களாக திரையில் தாய்மையின் சாரமாக திகழ்ந்த கவியூர் பொன்னம்மாவின் மறைவால், மலையாள சினிமாவில் ஒரு முக்கியமான அத்தியாயம் நிறைவுபெற்றுள்ளது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர்கள் ரசிகர்கள் என்று மலையாள திரையுலகமே கவியூர் பொன்னம்மாவின் மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.