"அல்லு அர்ஜுன் பற்றி.." அறிக்கை வெளியிட்ட காவேரி பருவா | Kaveri Baruah | Allu Arjun
டோலிவுட்டின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். ’அலா வைகுண்டபுரம்’, ’புஷ்பா’ இரு பாகங்களுக்குப் பிறகு இவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுவிட்டது. தற்போது அவர், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜுன் பற்றி பிராண்ட் மேலாளர் காவேரி பருவா என்பவர் ’ஸ்வீகிருதி டாக்ஸ்’ பாட்காஸ்டில் அளித்த பேட்டியில் கூறிய விஷயங்கள் சர்ச்சையானது.
அந்த பேட்டியில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்கப் போகும்போது, 42 கடுமையான விதிகளை (Do's and Don'ts) பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து அந்த 42 விதிகள் என்ன என்ற ஒரு பட்டியலை யாரோ ஒருவர் பதிவிட வைரலானது. அதில், 'அவரின் கண்களைப் பார்க்காதீர்கள், அவருடன் கைகுலுக்காதீர்கள், மிக அதீத நறுமணம் தரக்கூடிய வாசனைத் திரவியங்களை பயன்படுத்தக் கூடாது... இப்படியாக பல நிபந்தனைகள் பரவிவரும் அந்த 42 விதிகள் பட்டியலில் இருந்தது. இதனை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பலரும் இதற்கு எதிரான கருத்துகளை பதிவிட்டனர். தொடர்ந்து அந்த பேட்டி, யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் அல்லு அர்ஜுனின் தரப்பு, "நடிகர் அல்லு அர்ஜுன் பற்றிய கருத்துகள் ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. அவர் மிகுந்த கண்ணியத்துடன் நடப்பவர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, பொறுப்பானவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை தொடங்கியுள்ளோம்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தற்போது இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் காவேரி பருவா. அதில், "கடந்த சில நாட்களாக, எனது சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இருந்து ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த உரையாடலின்போது, ஒரு சந்திப்பிற்கு முன்பு நடிகர் அல்லு அர்ஜுனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் Do's and Don'ts குறித்து நான் சில விஷயங்களை கூறினேன். நான் சொன்ன விஷயங்கள் சரியானவை இல்லை எனவும், அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், `42 Do's and Don'ts' அடங்கிய எந்த ஆவணமும் அல்லு அர்ஜுனோ அல்லது அவர் சார்பாகச் செயல்படும் எவரோ எனக்கு வழங்கவில்லை. அந்த அறிக்கைகளை வெளியிட்டதற்கும், அவை ஏற்படுத்திய ஏதேனும் தவறான புரிதல் அல்லது நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததற்கும் நான் மனதார வருந்துகிறேன். நான் அந்தக் கருத்துகளை முழுவதுமாகத் திரும்பப் பெறுகிறேன். மேலும் ஏற்பட்ட சிரமத்திற்கும் நான் வருந்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

