சக்கர நாற்காலியில் வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா... என்னதான் ஆச்சு?
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தானா, தன்னுடைய படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் ராஷ்மிகாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி இருந்த புஷ்பா 2 திரைப்படம் வசூல் நீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து, தற்போது மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும், ‘சாவா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா.
இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்வதற்காக, காலில் அடிப்பட்ட நிலையில், கட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்டிருந்தார் ராஷ்மிகா.
தொடர்ந்து நடைபெற்ற ‘சாவா’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், நொண்டி நொண்டி செல்லும் வீடியோக்கள் சமூக வலதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஷ்மிகா அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது காலில் ஏற்பட்ட காயம்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒருவாரத்துக்கு முன்பு தனது சமூக வலைதளப்பக்கத்திலும் இதுகுறித்தான பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில் அவர், “எனது புனிதமான உடற்பயிற்சி கூடத்தில் என்னை நானே காயப்படுத்திக் கொண்டேன். தாமா, சிக்கந்தர் மற்றும் குபேரனுக்கான படப்பிடிப்பு தளங்களுக்கு, நான் இப்போது திரும்பிச் செல்ல முடியாது. என்னால் ஏற்பட்ட இந்த தாமதத்திற்கு இயக்குநர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்தே நேற்று நொண்டியபடி நிகழ்ச்சியொன்றில் ராஷ்மிகா பங்கேற்றுள்ளார். அவரது வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் ஒருபுறம், ‘ராஷ்மிகா விரைவில் குணமடைய வேண்டும்’ என்றும், மறுபுறம் ‘காலில் அடிப்பட்டால் ஏன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும்.. இது ட்ரைலர் வெளியீடுதானே.. காயம் சரியானபின் வரும் ப்ரோம்ஷன்களில் கலந்துகொண்டிருக்கலாம். இது அனைத்தும் புரமோஷனுக்கான வேலைதான்’ என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.