”கமல் உரிய பதில் சொல்வார்; ஆனால் நீங்கள்..” - மொழி விவகாரத்தில் ஆவேசமாக பேசிய சிவராஜ் குமார்!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி கன்னடம். அது, தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” எனத் தெரிவித்திருந்தார்.
கமலின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்களைக் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல் கொடுத்திருந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் விளக்கமளித்த கமல், ”அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ’தக் லைஃப்’ நிகழ்ச்சியில் மொழி குறித்து கமல் பேசியது சர்ச்சையான நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “கமல் சார் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. அவருக்கு, தான் என்ன சொன்னார் என்று நன்றாகவே தெரியும்; அதற்கு அவர் உரிய பதிலையும் சொல்வார்.
கன்னடம் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். கன்னடத் திரைத்துறையிலேயே புதுமுகங்கள் வந்தால் அவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும்போது மட்டும் பேசுவதில் சரியில்லை. நான் கன்னடத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.