ஆஸ்கர் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பிடித்த சூர்யாவின் ’கங்குவா’!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’. யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்து பெரும் பொருட்செலவில் உருவான இப்படம், 3D தொழில்நுட்பத்தில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் கடந்தாண்டு நவம்பர் 14 அன்று வெளியானது.
1000 கோடி, 2000 கோடி என்று அதிகப்படியான எதிர்ப்பார்ப்பில் வெளியான கங்குவா திரைப்படம், குறிப்பிட்டு பாராட்டும் படியான மேக்கிங் இருந்தாலும் அதிகப்படியான சத்தம், கதை மற்றும் திரைக்கதையில் தொய்வு என்ற பல்வேறு காரணங்களால் ரசிகர்களின் வரவேற்பை பெறாமல் தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெறத்தவறினாலும், ஆஸ்கர் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பிடித்திருக்கும் கங்குவா திரைப்படம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான தகுதிப்பட்டியலில் கங்குவா..
97வது ஆஸ்கர் விருதுகளுக்காக உலகம் முழுவதும் இருந்து 323 படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 207 படங்கள் ஃபில்டர் செய்யப்பட்டு சிறந்த படம் என்ற பிரிவில் தகுதிப்பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இந்த 207 படங்களின் பட்டியலில் கங்குவா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
கங்குவாவுடன் சேர்ந்து மற்ற இந்திய படங்களாக `ஆடு ஜீவிதம்', `ALL WE IMAGINE AS LIGHT', `BAND OF MAHARAJAS', `THE ZEBRAS' முதலிய படங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தப் படங்கள் தேர்வாக அதிகப்படியான வாக்குகளைப் பெற வேண்டியது கட்டாயம். இந்த சூழலில் அவற்றிற்கான வாக்களிப்பு ஜனவரி 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் எனவும், எந்தெந்த படங்கள் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது என்பது ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.