கமலுக்கு சரமாறி கேள்வி எழுப்பிய கர்நாடக நீதிமன்றம்... அறிக்கை வெளியிட்ட கமல்!
தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், இதுதொடர்பான கமல்ஹாசனிடத்தில் சரமாறியான கேள்விகளை கர்நாடக உயர்நீதிமன்றம் எழுப்பியது.
அதில்,” நீங்கள் எந்த அடிப்படையில் பேசினீர்கள். தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? . நீங்கள் வரலாற்று ஆய்வாளரா, மொழியல் வல்லுநரா ? . கமல்ஹாசன் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு. அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது.” என்று பல கேள்விகளை கர்நாடகா நீதிமன்றம் எழுப்பியது. வழக்கை 2.30 மணிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் (karnataka film chamber of commerce) தலைவர் நரசிம்ஹலுவிற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ” 30/05/2025 அன்று நீங்கள் எழுதிய கடிதத்தை நான் பெற்றேன். கர்நாடக மக்கள் மீதான ஆழ்ந்த மரியாதையின் அடிப்படையில், இதற்கு நான் மனமுவந்து பதிலளிக்கிறேன்.
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் நான் அளித்த உரை எனது மனதார்ந்த உணர்வுகளால், குறிப்பாக டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தை, குறிப்பாக சிவராஜ்குமாரை பற்றிய அன்பின் வெளிப்பாடுதான் .. ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது . நான் கூறிய வார்த்தைகள் அனைத்தும் நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பத்தினரென்று உணர்த்தவே தவிர மொழியை சிறுமை படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறியது இல்லை. கன்னட மொழியின் பாரம்பரியத்தைக் குறைக்கும் நோக்கமோ, அல்லது கன்னட மொழிக்குறித்த விவாதமோ கிடையாது.
தமிழைப் போலவே, கன்னட மொழிக்கும் பெருமையான இலக்கிய, கலாச்சார மரபுகள் உள்ளன. என் பயணத்தில் முழுக்க முழுக்க, கன்னட மொழி பேசும் மக்களிடமிருந்து நான் பெற்ற அன்பும் ஒத்துழைப்பும் எனக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்று. நான் இதனை என் மனச்சாட்சியுடன் சொல்கிறேன் . என் கன்னட மொழி மீதான அன்பு உண்மையானது. தாய்மொழியை நேசிக்கும் கன்னட மக்களின்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த தேசத்தின் எல்லா மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு ஆழமானது உணர்ச்சிபூர்வமானது. நான் இந்திய மொழிகளின் சமத்துவத்திற்காகப் எல்லா நேரங்களிலும் போராடி இருக்கிறேன். எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியின்மீது ஆதிக்கம் செய்வதை நான் எதிர்க்கிறேன். ஏனெனில், இது ஒன்றுப்பட்ட நமது இந்தியாவின், மொழி சமச்சீரை பாதிக்கும் என்று நான் கருதுகிறேன்.
நான் 'சினிமா' எனும் மொழியை அறிவேன். சினிமா என்பது எல்லா மனங்களையும் ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழி. அந்த மொழிக்கு அன்பும் உறவும் மட்டுமே தெரியும். என்னுடைய கருத்து நம்மிடையே உள்ள அன்பையும் உறவையும் பலப்படுத்தவே சொல்லப்பட்டது.
இந்த அன்பும் பிணைப்பும் எனது மூப்பர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட ஒன்று. அதனால்தான், சிவன்னா (சிவராஜ்குமார்) அந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால், இதனால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஆனால் நம் இருவருக்குமான அன்பும் மரியாதையும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.
சினிமா என்பது மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும், பிரிப்பதற்கான சுவராக அல்ல. இதுவே என் உரையின் நோக்கமும் கூட. ஒருபோதும் வெறுப்புக்கும் பிரச்னைகளுக்கும் இடம் கொடுக்க நான் விரும்பவில்லை; கொடுத்ததுமில்லை. என் வார்த்தைகள், நான் அதனை கூறிய உண்மையான உணர்வோடும் நோக்கத்தோடும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதையே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கர்நாடகம், அதன் மக்கள் மற்றும் அந்த மொழியின்மீதான என் நீண்டகால அன்பும் மரியாதையும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என விழைகிறேன்.
இந்த குழப்பம் தற்காலிகமானதென்றும், இது நாம் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். “ என்று பதிவிட்டுள்ளார்.