எப்படி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் `ஜெயிலர் 2’ | Jailer 2 Review
ஜெயிலர் முதல் பாகத்தின் கதை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு தொடங்குகிறது. டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்), தனது குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு வந்து, அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மறுபுறம், வர்மனைக் கொன்றது யார், அவனிடம் இருந்த 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் என்னவாயின என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடை தேடி விசாரணையில் இறங்குகிறார் வர்மனின் தலைவன் போதி கல்பக் (எஸ்.ஜே. சூர்யா). இதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு வர்மனின் நண்பரான திலீபிடம் (சுராஜ் வெஞ்சாடமூடு) ஒப்படைக்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் அமைதியாகக் குடியேறினாலும், வர்மனைக் கொன்றதால் அவனுக்கு மேலே இருக்கும் தலைவனிடமிருந்து தனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதை முத்துவேல் பாண்டியன் உணர்கிறார். இதனால், அந்தக் கும்பலையே ஒட்டுமொத்தமாக அழிக்கக் காத்திருக்கிறார். ஒருபுறம் எஸ்.ஜே. சூர்யா ரஜினியைத் தேட, மறுபுறம் ரஜினி எஸ்.ஜே. சூர்யாவைத் தேடுகிறார். இதற்குப் பிறகு என்ன நடக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற ரஜினி என்ன செய்தார்? என்பதுதான் ஜெயிலர் 2 படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பலமே இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான். தனது தனித்துவமான டார்க் ஹியூமர் பாணியுடன் இந்தப் பாகத்தையும் கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், முதல் பாகத்தைவிட இந்தப் பாகத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இன்னும் சிறப்பாகக் கைகொடுத்திருக்கின்றன. திரைக்கதையிலும் முதல் பாகத்தில் முழுமையாக முடிக்கப்படாத பல விஷயங்களுக்கு இந்தப் பாகத்தில் தெளிவான முடிவைக் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் வழக்கம்போல மாஸ் மற்றும் நகைச்சுவையில் அசத்துகிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை, சிறிய ரவுடிகளிடம் பணிந்து செல்வது, பின்னர் அவர்களிடமே தனது கம்பீரத்தைக் காட்டுவது என ஒவ்வொரு காட்சியிலும், “ஃபிரேமைப் பாருங்க ஜி!” என்று சொல்ல வைக்கும் அளவுக்கு ரசிக்க வைக்கிறார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணாவுக்கு இந்தப் பாகத்தில் காட்சிகள் குறைவாகவே இருந்தாலும், முக்கியமான ஒரு காட்சியில் அழுத்தமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள். துணை வில்லனாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடுவின் தனித்துவமான வில்லத்தனமும் ரசிக்கும்படி இருக்கிறது.
மூர்த்தி கதாபாத்திரத்தில் வரும் நமோ நாராயணனும், அவரிடம் சிக்கும் யோகி பாபுவும் முதல் பாதியில் முக்கியமான கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள். இவர்களது காட்சிகள் அனைத்தும் நகைச்சுவைப் பட்டாசுகளாக வெடிக்கின்றன. முக்கிய வில்லன்களாக வரும் கல்பக் குடும்பத்தினர் அனைவருமே கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக, வித்யா பாலன் ரஜினியிடம் காபி வேண்டுமா என்று கேட்டு கிண்டல் செய்வதும், பின்னர் அவரிடமே கலாய் வாங்குவதும் என ரசிக்க வைக்கிறது. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
மிதுன் சக்கரவர்த்திக்குப் பெரிய அளவில் அழுத்தமான கதாபாத்திரம் அமையவில்லை என்றாலும், தனது ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் கவனம் ஈர்க்கிறார். எஸ்.ஜே. சூர்யா வழக்கம்போலத் தனது வித்தியாசமான நடிப்பால் கவர்கிறார். அதிலும், “காதையா கடிக்கிறீங்க?” என்று கேட்கும் காட்சி செம காமெடி. முதல் பாகத்தில் இடம்பெற்ற சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இந்தப் பாகத்தில் மீண்டும் தோன்றுகிறார்கள். அவர்களைப் பயன்படுத்திய விதமும் சிறப்பாக இருக்கிறது. இதுதவிர, படத்தில் மேலும் சில முக்கியமான கேமியோ கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கிளைமாக்ஸில் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பான ஆச்சரியம் காத்திருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் ஜெயிலர் 2 சிறப்பான படமாக உருவாகியிருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு ஸ்டைலிஷாக அமைந்திருப்பதுடன், மாஸ் காட்சிகளுக்கும் எந்தக் குறையும் வைக்கவில்லை. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. படத்தின் இரண்டாவது கதாநாயகன் அவர்தான் என்று சொல்லும் அளவுக்கு இசையால் காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தின் குறைகளாகச் சொல்ல வேண்டுமென்றால், விறுவிறுப்பாக நகரும் முதல் பாதியின் வேகம் இரண்டாம் பாதியில் சற்றுக் குறைகிறது. முக்கியமான ஓர் உணர்ச்சிகரமான காட்சியின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து, அடுத்த காட்சிக்குச் சென்றிருக்கலாம். சில CG காட்சிகள் இன்னும் தரமாக கையாண்டிருக்கலாம். அதேபோல், ஜெயிலருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் யாரவது ஒருவரின் உதவி மூலம் தப்பிவிடுவார் என்பதால், படத்தில் எந்த டென்ஷனும் இல்லை.
மொத்தத்தில் பார்க்கும் போது இது ஒரு அசத்தலான மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது. தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் ஜெயிலர் 2.

