\
Aaron Sorkin's The Social Reckoning Review
Aaron SorkinThe Social Reckoning Review

முகநூலின் முகமூடியைக் கிழிக்கும் அதிரடி திரில்லர் படம்! | The Social Reckoning Review

தொழில்நுட்பங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட பின்னர், நாம் எதிர்பாரா விதங்களில்கூட ஆபத்து வரக்கூடும் என்பதன் எச்சரிக்கை மணிதான், 2021 Facebook Leakம், அதை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த The Social Reckoning படமும்.
Published on: 
முகநூலின் முகமூடியைக் கிழிக்கும் அதிரடி திரில்லர் படம்!(3 / 5)

முகநூலின் முகமூடிகளை கழற்றும் படமே The Social Reckoning!

இந்தப் படம் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பு இதன் முந்தைய பாகம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் 2010இல் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் வெளியான `The Social Network'. உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவானதன் பின்னணியையும், அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சந்தித்த போராட்டங்களையும், அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் மையமாக கொண்டது இது. இப்படத்துடன் நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், The Social Network படத்தின் தொடர்ச்சி என்றுதான் The Social Reckoningஐப் பார்க்க வேண்டும்.

பரந்துபட்ட சமூக வலைத்தளமான உருவான பின்னர், தங்களின் சுய லாபத்துக்காகவும், எதேச்சையாகவோ திட்டமிட்டோ அவர்களின் செயல்பாடுகள் வெறுப்பு பிரசாரத்தை எப்படி முதன்மையாக மாற்றியது என்பதையும் மையமாக கொண்டு 2021இல் பேசுபொருளான Facebook leak பற்றியதுதான் இந்தப் படம். குறிப்பாக, ஃபேஸ்புக்கில் பணியாற்றிய Frances Haugen வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் The Wall Street Journal பத்திரிகையாளர் Jeff Horwitz நடத்திய விசாரணையை மையமாகக் கொண்டது.

2019இல் ஃபேஸ்புக் நிறுவன data engineerராக பணியாற்றும் Frances Haugen முகநூலில் வீடியோ ஒன்றைப் பார்க்கிறார். அது அதிக வெறுப்பைப் பரப்பும் வீடியோவாக இருக்கிறது. இதன் பின்னால் என்ன இருக்கிறது என ஆராய்ச்சி செய்ய, ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ச்சியாக வெறுப்பு பரப்பும் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும், உண்மைத்தன்மை (Fact Check) சரிபார்க்கப்படாத தகவல்கள் அதீதமாக பதிவிடப்படுவதையும் கவனிக்கிறார். அதேவேளையில், Wall Street Journal பத்திரிகையாளர் Jeff Horwitz கருத்துச் சுதந்திரம் பற்றிய வீடியோவின்கீழ், எதிர் கருத்தாக வெறும் இரண்டே கமெண்ட்டுகள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளது, மீதம் உள்ள அத்தனை கமெண்ட்களும் அதற்கு ஆதரவாக இருப்பதை கவனிக்கிறார்.

ஃபேஸ்புக்கில் ஏதோ சரியில்லை எனக் கருதும் இந்த இருவரும் ஒருகட்டத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். அதன்பின் ஃபேஸ்புக் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் என்ன? இதனால் மார்க் எதிர்கொண்ட கேள்விகள் என்ன? இதன்மூலம் வெளிவந்த உண்மைகள் என்ன? இதெல்லாம்தான் படத்தின் கதை.

தொழில்நுட்பங்களில் எப்போதும் நன்மை, தீமை இருக்கிறது என்பதைத் தாண்டி, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட பின்னர், நாம் எதிர்பாரா விதங்களில்கூட ஆபத்து வரக்கூடும் என்பதன் எச்சரிக்கை மணிதான், 2021 Facebook Leakம், அதை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த The Social Reckoning படமும்.

ஃபிரான்சஸ் ஹாகன் கதாபாத்திரத்தில் மைகி மேடிசனும், பத்திரிகையாளர் ஜெஃப் ஹார்விட்ஸ் கதாபாத்திரத்தில் ஜெரமி ஆலன் வைட்டும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில், நிஜமான பாத்திரங்களை நகலெடுப்பதைத் தாண்டி, அவர்களை இயல்பான மனிதர்களாகத் திரையில் காட்டுகிறார்கள். அவர்களின் மனநிலை, அழுத்தம் மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துவது என அசத்தி இருக்கிறார்கள். மார்க் ஜுக்கர்பெர்க் கதாபாத்திரத்தில் ஜெரமி ஸ்ட்ராங் எந்த அலட்டலும் இல்லாமல் ஒரு மிடுக்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு வெளியான The Social Network பட திரைக்கதை ஆசிரியர் ஆரோன் சோர்கிதான் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்த சமகாலப் பிரச்னையை மையமாகக் கொண்ட கதை, உண்மைச் சம்பவங்களால் பின்னப்பட்ட திரைக்கதை என படத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. ஒரு பக்கம் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரம், பொறுப்புணர்வு குறித்த விவாதம் மற்றும் அவர்களின் லாப வெறி பற்றி பேசும் படம், ஆங்காங்கே நகைச்சுவையை வெளிப்படுத்தவும் தவறவில்லை.

2021 Facebook Leak என்பது ஒரு நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியான சம்பவம் மட்டுமல்ல. சமூக வலைத்தளங்கள் மக்களின் சிந்தனை, இளைஞர்களின் மனநலம், அரசியல் விவாதங்கள் மற்றும் தகவல் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் குறித்த முக்கியமான விவாதத்தை உலகளவில் உருவாக்கிய நிகழ்வு.

இந்தப் படத்தின் குறை எனப் பார்த்தால் அதிகமான தொழில்நுட்ப விவரங்கள் அல்லது நீண்ட உரையாடல்கள் கதையின் வேகத்தைக் கொஞ்சம் பாதிக்கிறது.

‘தி சோஷியல் ரெக்கனிங்’ படம் பொழுதுபோக்கு எனப் பார்க்காமல், அவற்றின் பின்னணியில் இருக்கும் அதிகாரம் மற்றும் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்பும் திரைப்படமாக பார்க்க வேண்டும். சமூக வலைதளங்களின் மறுபக்கத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மற்றும் தொழில்நுட்பத் திரில்லர்களை விரும்புபவர்களுக்கும் இப்படம் சிறப்பான விருந்தாக அமையும்.

இந்த பிரச்னைக்குப் பிறகு என்ன எல்லாம் நடந்தது எனக் காட்டிவிட்டு, படம் முடியும்போது சில விஷயங்களைப் பதிவிடுவார்கள். அதில் முக்கியமான ஒன்று, ஒரு தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்தல் (Fact Check) விஷயத்தில் உண்மைத்தன்மையை சரிவர பேணவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அதன் பின்னர் ஃபேஸ்புக் உண்மைத் தன்மையை ஆராய்தலையே நிறுத்திக் கொண்டது (இப்போது சில விதிமுறைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் தகுந்த வகையில் இருக்கிறது) என்ற ஓர் அதிர்ச்சித் தகவலைப் போட்டு படத்தை முடிக்கிறார்கள்.

எனவே, இதனை ஒரு திரைப்படமாக பார்ப்பதைவிட, இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்பை, அதன்பின் இருக்கும் அரசியல் மற்றும் வியாபார அமைப்பை புரிந்துகொள்ளும் ஒரு கருவியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com