’ஜெய் ஹோ’ நடிகர் காலமானார்.. யார் இந்த முகுல் தேவ்?
’சன் ஆஃப் சர்தார்’, ’ஜெய் ஹோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களில் மத்தியில் பிரபலமான நடிகர் முகுல் தேவ் (54) நேற்று இரவு காலமானார். அவருடைய மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், முகுல் தேவின் மரணம் பற்றிய தகவலை, அவரது நெருங்கிய தோழியான நடிகை தீப்ஷிகா நாக்பால் சமூக ஊடகங்கள் மூலம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், “இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரது திடீர் மரணத்திற்கான காரணம் யாருக்கும் தெரியாது. அவர் இனி இல்லை. மேலும் இது தொழில்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. ஏனென்றால் அவர் ஒரு அற்புதமான நடிகர், ஓர் அற்புதமான மனிதர்” எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த முகுல் தேவ்?
புதுடெல்லியில் பஞ்சாபி குடும்பம் ஒன்றில் பிறந்த முகுல் தேவ், ஜலந்தருக்கு அருகிலுள்ள ஒரு கிராமமே அவரது பூர்வீகம் ஆகும். இவர், நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். 1996ஆம் ஆண்டு ’மும்கின்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் விஜய் பாண்டே என்ற வேடத்தில் முகுல் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் ’ஏக் சே பத் கர் ஏக்’ என்ற பாலிவுட் கவுண்டவுன் நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றினார். தொடர்ந்து, ’ஃபியர் ஃபேக்டர்’ என்ற இந்தியாவின் முதல் சீசனையும் தொகுத்து வழங்கினார். அவர், ’தஸ்தக்’ என்ற படத்தில் ஏசிபி ரோஹித் மல்ஹோத்ராவாக நடித்தார். இந்தப் படத்தில் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் அறிமுகமானார். முகுல் தேவ் கடைசியாக ’அந்த் தி எண்ட்’ என்ற இந்தி படத்தில் நடித்தார்.