பாலய்யாவின் பகவந்த் கேசரி-ஐ 5 முறை பார்த்த விஜய்.. அப்போ தளபதி 69 அதுதானா? உண்மையை உடைத்த VTV கணேஷ்!
தெலுங்கில் வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கேட்டதாக நடிகர் VTV கணேஷ் தெலுங்கு நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். இருப்பினும் பகவந்த் கேசரி இயக்குநர் அதை மறுத்துவிட்டதாக விடிவி கனேஷ் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் VTV கணேஷ் பேசியது, தற்போது வைரலாகி பேசுபொருளாகி வருகிறது.
இதையடுத்து, அந்த ரீமேக்கைதான், ஹெச்.வினோத் எடுக்கிறாரா என்ற கேள்வி, ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்தபோது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற போட்டியும் உருவானது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜயின் 69-வது படத்தை H.வினோத் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இது அவரது கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அரசியல் தொடர்பான படமாக இருக்குமோ என்ற பேச்சும் உருவானது. படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், நீல வண்ண பின்னணியில், கையில் தீப்பந்தம் ஏந்தியிருப்பது போல காட்சிகள் இருந்தது, ரசிகர்கள் சந்தேகத்தை வலுப்படுத்தியது. இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.
இதற்கிடையில்தான் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் VTV கணேஷ் விஜயின் படம் குறித்து பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோவில் VTV கணேஷ், “தெலுங்கில் வெளியான நடிகர் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை, நடிகர் விஜய் மிகவும் மிகவும் ரசித்தார். படத்தை விஜய் ஐந்து முறை பார்த்ததார்.
பின் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய அப்படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடியை நடிகர் விஜய் கேட்டார். ஆனால் ரீமேக் செய்ய விருப்பம் இல்லை என அனில் மறுத்துவிட்டார். விஜயின் கடைசி படத்தை இயக்க பெரிய பெரிய இயக்குனர்கள் போட்டிபோட்டனர்” என்றார்.
அவர் பேசியபோது மேடையில் இருந்த இயக்குனர் அனில் ரவிபுடி மைக்கை அவரிடம் இருந்து வாங்கி, “நடிகர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான், அவர் மிகவும் நல்ல மனிதர், ஒரு முறை அவரை பார்த்தாலே அவர் யார், என்பது புரியும். விஜய் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அது ரீமேக்கா இல்லையா என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். அதை இப்போது பேசுவது சரியாக இருக்காது” என தெரிவித்தார்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து பகவந்த் கேசரியில் உள்ள பாலைய்யாவின் ரோலில்தான் விஜய் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.