"அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது.." - மோகன்லால் பகிர்ந்த வேதனை | Mohanlal
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால், மம்மூட்டியுடன் நடித்த ‘பேட்ரியாட்’ பட வெளியீட்டை முன்னிட்டு பேட்டியளித்து, தன்னுடன் நடித்த பலர் இப்போது இல்லை என்பதால் பழைய காட்சிகளைப் பார்க்கும் போது ஆழ்ந்த சோகத்தில் ஆழ்கிறேன் என்கிறார். மரணம் தவிர்க்க முடியாத யதார்த்தம் என்றாலும், கண்ணீர் தத்துவங்களை மீறும் உணர்ச்சி என அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவின் முதன்மையான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவரும் மம்மூட்டியும் இணைந்து நடித்துள்ள `பேட்ரியாட்' படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் மோகன் லால். அதில் தன்னுடன் நடித்த நடிகர்களின் மறைவு பற்றி பகிர்ந்து கொண்டார். அது பற்றி மோகன்லால் கூறுகையில் "என்னுடைய பழைய படங்களின் சில காட்சிகளைப் பார்க்கும்போது என் மனம் சோகத்தில் மூழ்கிவிடும். அதற்குக் காரணம், அந்த பிரேம்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான்.
அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது. ஆனால் துக்கப்படுவதால் என்ன பயன்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம். இந்த உண்மையை முழுமையாகத் தெரிந்தே நான் இப்போதும் வருந்துகிறேன். கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களைக் கண்டுவிட்டது.
ஆனாலும் மனிதன் இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறான். நானும் ஒரு சாதாரண மனிதன்தானே! என் தாய், தந்தையர், சகோதரர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள் என்பது எனக்குப் பெரும் துயரத்தைத் தருகிறது. ஆனாலும், நான் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை. கண்களை மூடினால் அவர்கள் எனக்குள்ளேயே இருக்கிறார்கள். என்னால் அவர்களைத் தொடவோ பார்க்கவோ முடியாது, அவ்வளவுதான்." எனப் பேசியுள்ளார்.

