மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்|'மனதில் உறுதி வேண்டும்'- எஸ்.பி.பி ஏற்று நடித்த Dr.அர்த்தநாரி!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் ‘எஸ்.பி.பாலசுப்ரமணியன்’ ஏற்று நடித்திருந்த ‘டாக்டர் அர்த்தநாரி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
எஸ்.பி.பி
எஸ்.பி.பிபுதியதலைமுறை

சிறந்த துணைக் கதாபாத்திரங்களைப் பற்றி உரையாடும் போது இயக்குநர் பாலசந்தரின் படங்களில் வரும் காரெக்டர்கள் இந்தத் தொடரில் நிறைய வருகின்றன. அது திட்டமிட்டதல்ல. தன்னிச்சையானது. ஏனெனில் தன்னுடைய திரைப்படங்களின் ஒவ்வொரு பாத்திரத்தையும் அத்தனை தனித்தன்மையுடனும் பிரத்யேகமாகவும் வடிவமைப்பதில் பாலசந்தர் வல்லவர். ஒரு சில நிமிடங்களே வரும் கேரக்டர் என்றாலும் அது நம் மனதில் நின்று விடும் அளவிற்கு அந்த வடிவமைப்பில் ஒரு தீவிரமான மெனக்கிடல் இருக்கும்.

இந்த வாரமும் நாம் காணவிருப்பது பாலசந்தர் உருவாக்கிய ஒரு காரெக்டர்தான். இந்தப் பாத்திரத்திற்கு என்ன சிறப்பு என்றால் பிரபலமான பாடகராக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகராக வெளியுலகிற்குத் தெரிய வந்தது, இந்தப் படத்தின் மூலம்தான்.

எஸ்.பி.பி. என்னும் இயல்பான நடிகர்

நீங்கள் மேடைக்கச்சேரிகளில் கவனித்திருக்கலாம். எஸ்.பி.பி பாட வரும் போது அந்த இடத்திற்கே ஒரு தனியான பிரகாசம் வந்து விடும். பாடும் திறமையைத் தவிர்த்து தனது இயல்பான குறும்புகளால் மேடையில் கூடுதல் சுவையை உருவாக்கி விடுவார். அவரிடமிருந்து வெளிப்படும் இயல்பான நடிகரை பாலசந்தர் மனதில் குறித்து வைத்திருக்க வேண்டும். அதுவே ‘மனதில் உறுதி வேண்டும்’ கதாபாத்திரமாக மாறியிருக்கலாம். ஆம், அதுவரை கெஸ்ட் ரோல்களில் வந்திருந்தாலும் ஒரு ‘நடிகராக’ பாலு அறிமுகமான படம் இதுதான். அர்த்தநாரி என்னும் டாக்டர் காரெக்டரில் படம் முழுக்க வந்து சுவாரசியப்படுத்தியிருந்தார்.

இந்தப் படம் முழுக்க தன் மனைவியைப் பற்றி ஏதாவது ஒரு சம்பவத்தை சொல்லிக் கொண்டேயிருப்பார் அர்த்தநாரி. இறுதிக்காட்சியில் அது தொடர்பான ஒரு டிவிஸ்ட் இருக்கும். அது சுவாரசியமாகவும் நெகிழ வைப்பதாகவும் இருக்கும்.

டாக்டர் அர்த்தநாரியும் நர்ஸ் நந்தினியும்

ஒரு மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அர்த்தநாரி. அவரைக் கண்டவுடன் நர்ஸ் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு தங்கள் பணிகளை ஒழுங்காக பார்ப்பார்கள். ஒட்டுமொத்த ஆஸ்பத்திரியே அவரைப் பார்த்து பயப்படும் போது, அர்த்தநாரி பயப்படும் ஒரே நபர் நர்ஸ் நந்தினி. சுஹாசினி இந்தப் பாத்திரத்தை திறமையாகக் கையாண்டிருந்தார்.

ஒரு நோயாளியின் தந்தை டாக்டர் அர்த்தநாரிக்கு கோயில் பிரசாதத்தை கொடுக்க, சிகரெட்டை ஊதிக் கொண்டே அதை எடுக்கும் அர்த்தநாரி “போன முறை இப்படி பிரசாதம் குடுத்து என்னை மாட்டி விட்டுட்டிங்க. இந்தக் குங்குமத்தை வெச்சிக்கிட்டு வீட்டுக்குப் போனேனா… என் வொஃய்ப் என்னைப் பார்த்து கேட்டா. “உனக்குத்தான் கோயிலுக்குப் போற பழக்கமே இல்லையே. இது எந்த நர்ஸோட லிப்ஸ்டிக்குன்னு. ‘இது லிப்ஸ்டிக் இல்ல. குங்குமம்ன்னு சொன்னதும்.. ‘யாரந்த அந்த மாமி’ன்னு தனியாவர்த்தனம்’... என்று இயல்பான சிரிப்போடு எஸ்.பி.பி சொல்வதே அத்தனை சுவாரசியமாக இருக்கும்.

எஸ்.பி.பி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 40 | ‘உன்னால் முடியும் தம்பி’ மனோரமா | அண்ணியும் அம்மாதான்!

அந்த அறைக்குள் நர்ஸ் நந்தினி உள்ளே வர, மேஜையின் மீதிருக்கும் சிகரெட்டுக்களை எடுத்து ஒளித்து வைத்து விடுவார் அர்த்தநாரி. “ஆஸ்பிட்டலே உங்களைப் பார்த்து பயப்படுது. நீங்க ஒரு நர்ஸைப் பார்த்தா பயப்படறீங்க?” என்று நண்பர் கேட்க “என் கீழ வேலை செய்யறவங்க ரொம்ப டிஸிப்ளினா இருந்தா அவங்களைப் பார்த்தும் பயந்துதான் ஆகணும்” என்பார் அர்த்தநாரி.

“சிகரெட் பாக்கெட்தான் ஜெபமாலையா?”

நண்பர் கிளம்பும் சமயத்தில், “சாயந்தரம் சபாவுல கீதை சொற்பொழிவு இருக்கு. வொய்ப்போட வாங்களேன்” என்று அர்த்தநாரியை அழைக்க “எனக்கெதுக்குய்யா.. கீதையெல்லாம்.. என் ஸ்டெதஸ்கோப்ல கேக்கற லப்டப் சத்தம்தான் என்னுடைய கீதாபதோசம் .. ஸ்டெதஸ்கோப்தான் என் கீதை.. குரான்.. பைபிள்’ என்று பிரசங்கம் செய்ய, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சிகரெட் பாக்கெட்டை எடுத்து நீட்டும் நந்தினி “அப்ப இது என்ன ஜெபமாலையா?” என்று துடுக்குத்தனமாக கேட்க, சங்கடத்துடன் மெலிதாக வெட்கப்பட்டு நடிக்கும் எஸ்.பி.பியின் நடிப்பு பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

இன்னொரு முறை சிகரெட் பாக்கெட்டுக்களை வாங்கிக் குவித்து விட்டு (பட்ஜெட் வருது. விலையை ஏத்திடுவான்!) நந்தினியிடம் மாட்டிக் கொள்ளும் போது “என் மனைவி ஒரு சுவாரசியமான காரெக்டர் தெரியுமோ..” என்கிற அர்த்தநாரி ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று பாடி சமாளிப்பது சுவாரசியமான காட்சி.

ஒருவரிடம் உள்ள தனித்திறமைகளை படத்திற்குள் எப்படியாவது செருகி விடுவது பாலசந்தரின் ஸ்டைல். அந்த வகையில் பாலுவின் பாட்டுத்திறமை இந்தப் பாத்திரத்திற்குள் உறுத்தாமல் இணைக்கப்பட்டிருக்கும். பின்னணி இசை எதுவுமில்லாது ஒலிக்கும் சமயத்தில் கூட பாலுவின் குரல் கேட்பதற்கு அத்தனை இனிமையாக இருக்கும். இந்த வரம் ஒரு சில பாடகர்களுக்கே அமைந்த சமாச்சாரம். இப்படி விதம் விதமாக பாடி நந்தினியை திசை திருப்ப முயன்று வெற்றிகரமாக தோற்றுப் போய் அசட்டுத்தனமாக சிரிப்பார் அர்த்தநாரி.

எஸ்.பி.பி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 42- இயல்பான நடிப்பில் பிரமிட் நடராஜன்- அலைபாயுதே

இருமலின் மூலம் ஒரு நகைச்சுவை

அடுத்த காட்சி இன்னமும் சுவாரசியமானது. பாலசந்தரின் ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் ‘இருமல் தாத்தா’ என்றொரு கேரக்டர் வரும். அந்தப் பாத்திரத்தை நம்மால் பார்க்கவே முடியாது. மூடிய கதவிற்குப் பின்னால் வரும் இருமல் சத்தத்தின் மூலமாக நடித்திருக்கும். அதைப் போலவே இதிலும் ஒரு காரெக்டர். வசனமே கிடையாது. பதிலாக இருமல் சத்தம் மட்டும்தான். “இவருக்கு டிபி அட்டாக் ஆகியிருக்கு. ஆனாலும் சிகரெட் பிடிக்கறத விடமாட்டேன்றார்” என்கிற புகாருடன் ஒரு நோயாளியை அழைத்து வருவார் நந்தினி. அந்தக் கேரக்டர் இருமலின் மூலமாகவே டாக்டரை விசாரித்து விட்டு நாற்காலியில் அமர்வார்.

நீங்கதான் இவருக்கு அட்வைஸ் பண்ணனும் டாக்டர்” என்று நந்தினி கறாரான குரலில் சொல்ல, இப்போது இன்னொரு விதமான ஸ்ருதியில் இருந்து இருமல் சத்தம் அர்த்தநாரியிடம் இருந்து வெளிப்படும். “அவருக்கு அட்வைஸ் பண்ணனும்னா. நான் முதல்ல சிகரெட் பிடிக்கறத விடணும்.. அப்புறம் இருபத்து நான்கு மணி நேரம் பார்க்கணும்.. அப்புறம்தான் அவருக்கு அட்வைஸ் பண்ண முடியும்” என்று அர்த்தநாரி சொல்ல, நந்தினி அந்த ஸ்டேட்மெண்ட்டை சந்தேகமாக பார்க்க “இது என் ஸ்டதஸ்கோப் மேல சத்தியம். நான் இனிமே சிகரெட் பிடிக்க மாட்டேன்” என்று டாக்டர் சொல்ல சட்டென்று நெகிழ்ச்சியுடன் ஒரு புன்னகை நந்தினியிடமிருந்து தோன்றும் காட்சி அருமையானது.

ஒரு குழந்தையை பரிவுடன் தூக்குவது போல, தன்னுடைய கடைசி சிகரெட்டை எடுக்கும் அர்த்தநாரி, அதை முகர்ந்து விட்டு ‘பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு நீ நாம ரூபமுலகு நித்ய சுப மங்களம்’ என்று இனிமையான ராகத்துடன் பாடி சிகரெட்டை குப்பைத் தொட்டியில் போட்டு அந்தப் பழக்கத்தை ஒட்டுமொத்தமாக கைவிடுவதை உணர்த்தும் காட்சி சிறப்பானது.

“என் மனைவி ஒரு சுவாரசியமான காரெக்டர் தெரியுமோ?”

நந்தினி செய்யும் ஒரு தியாகத்திற்காக பாராட்டு விழாவை ஏற்பாடு செய்கிறார் அர்த்தநாரி. “இதுக்காவது உங்க வொய்ஃபை கூட்டிட்டு வருவீங்கன்னு நெனச்சேன். ஏன் இப்படி அவங்களை கண்ல காட்டாம ஒளிச்சு ஒளிச்சு வெக்கறீங்க?” என்று நந்தினி கேட்க வேறு வழியில்லாமல் அதுவரை சொன்ன பொய்யை உடைக்கிறார் அர்த்தநாரி.

எஸ்.பி.பி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 41 | ‘நான் வாழ வைப்பேன்’ ஸ்டைலிஷ் ரஜினிகாந்த்!

எனக்கு கல்யாணமே ஆகலைம்மா.. 24 மணி நேரமும் மருத்துவ சேவை செய்யணும்னு கல்யாணம் பண்ணிக்காம இருந்துட்டேன். நிறைய பேரு பொண்ணு தர்ற டிரை பண்ணாங்க. டபாய்ச்சுட்டேன். வேற ஊருக்கு வர்றப்ப ‘எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு’ன்னு பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டேன். ஒரு கட்டத்துல நான் உருவாக்கின கற்பனை மனைவி மேல எனக்கே ஒருவிதமான லவ் வந்துடுச்சு.. அவ ஒரு சுவாரசியமான காரெக்டர் தெரியுமோ?” என்று அர்த்தநாரி சிரித்துக் கொண்டே சொல்ல திகைத்துப் போய் பார்க்கிறாள் நந்தினி. அவள் எடுக்கப் போகும் முடிவிற்கும் இந்தச் சம்பவம் ஒரு காரணமாக அமைகிறது.

ஹீரோ பாத்திரம் உள்ளிட்டு பல பாத்திரங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறகு நடித்தாலும் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது, மனதில் உறுதி வேண்டும் படத்தின் ‘அர்த்தநாரி’ கேரக்டர்தான். தனது இயல்பான நடிப்பின் மூலம் இந்தப் பாத்திரத்தை மறக்க முடியாதபடி செய்து விட்டார் பாலு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com