ஹீரோக்கள் டூ வில்லன்கள்.. ஹாலிவுட்டை அதிரவைக்கும் Tech கோடீஸ்வரர்கள்!
செய்தியாளர் - M. மீரா
ஒரு காலத்தில் ஹீரோக்களாகப் பார்க்கப்பட்ட டெக் கோடீஸ்வரர்கள், தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவான இடம் சிலிக்கான் வேலி.
புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றிய டிஜிட்டல் வளர்ச்சி என உலகையே வியக்கவைத்த பல சாதனைகளுக்குப் பின்னால் இருந்தவர்கள் இந்தத் தொழில்நுட்பத் தலைவர்கள் குறைந்த வளங்களுடன் தொழில் தொடங்கி, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனங்களை உருவாக்கிய இவர்களை, இளைஞர்கள் பலரும் தங்களது முன்னுதாரணங்களாகப் பார்த்தனர்.
ஆனால், இன்று இவர்களின் அதிகாரம், அரசியல் தொடர்புகள், நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி உண்மையில் மக்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது சில கோடீஸ்வரர்களின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கிறதா?இப்படியான கேள்விகளுக்குத் தனது திரைப்படங்கள் மூலம் பதில் தேடத் தொடங்கியிருக்கிறது ஹாலிவுட்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கை மையமாகக் கொண்டு, இயக்குநர் அலெக்ஸ் கிப்னி உருவாக்கியுள்ள ஆவணப்படம் கவனம் பெற்றுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் மூலம் தொழில்நுட்ப உலகில் உயர்ந்த மஸ்க்கின் பயணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான அவரது அரசியல் தொடர்புகள் எனப் பல்வேறு அம்சங்களை இந்தப் படம் ஆராய்கிறது.
அடுத்ததாக, ஃபேஸ்புக் நிறுவனத்தை மையமாகக் கொண்ட ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம். ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹாகன் வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பயனர்கள் அதிக நேரம் செலவிடும் வகையில் செயல்படும் அல்காரிதம்கள், வெறுப்புப் பேச்சுகள் பரவுவதற்கு வழிவகுக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் இதில் இடம்பெறுகின்றன.
இதனால், சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடுகள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.
இதேபோல், தெரானோஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலிசபெத் ஹோம்ஸின் கதையும் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. மோசடி மற்றும் சதித்திட்டம் தொடர்பான குற்றங்களில் ஹோம்ஸ் தண்டனை பெற்றார். அவரது வீழ்ச்சியை விவரிக்கும் ஆவணப்படமும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், ஓபன்ஏஐ நிறுவனத் தலைவர் சாம் ஆல்ட்மேனை மையமாகக் கொண்ட ‘ஆர்ட்டிஃபிஷியல்’ திரைப்படமும் பேசப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, அதிகாரம், பேராசை, கட்டுப்பாடு போன்ற அம்சங்கள் இந்தப் படத்தின் மையமாக உள்ளன.
ஹாலிவுட் ஏன் திடீரெனத் தொழில்நுட்பக் கோடீஸ்வரர்களைக் குறிவைக்கிறது? ஒரு சிலரின் கைகளில் அளவுக்கு அதிகமான செல்வமும் அதிகாரமும் குவிவது குறித்த கவலைகளே இதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களையும் சேவைகளையும் மட்டுமல்லாமல், அவற்றை உருவாக்கும் தலைவர்களின் முடிவுகளையும் தற்போது மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்தத் திரைப்படங்கள் அந்தக் கேள்விகளை இன்னும் தீவிரமாக முன்வைக்கின்றன. ஒரு காலத்தில் உலகை மாற்றும் ஹீரோக்களாகக் கொண்டாடப்பட்டவர்கள், இன்று விமர்சனங்களின் மையமாக மாறியிருக்கிறார்கள்.

