‘பராசக்தி’ தலைப்புச் சிக்கல்.. இருதரப்பும் சமரசமானாலும் நீடிக்கும் பஞ்சாயத்து..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதற்கு `பராசக்தி' என்ற தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாவதாக சொல்லப்படும் இப்படத்தின் டீசரும் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
அப்போது துவங்கியது பஞ்சாயத்து.
நேற்று காலை 11 மணிக்கு இன்னும் இரண்டு படங்களின் பெயர் அறிவிப்புகள் வெளியானது. ஒன்று ரவி மோகன் நடிக்கும் `கராத்தே பாபு'. இன்னொன்று விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கி வரும் `சக்தித் திருமகன்'. இதில் பிரச்சனையை கிளப்பியது விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்'தான். தமிழ் பதிப்புக்கு `சக்தித் திருமகன்' என்றும், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் `பராசக்தி' எனவும் காலையிலேயே தலைப்பை அறிவித்தனர்.
இவர்கள் காலையிலேயே அறிவித்ததால் ஒருவேளை சிவகார்த்திகேயன் படத்திற்கு வேறு தலைப்பு வைப்பார்களா என யோசிக்கும் போது, அதை மறுக்கும் விதமாக, சிவாஜி படத்தில் "பராசக்தி ஹீரோடா" என ரஜினி வசனம் பேசும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். மேலும் சிவகார்த்திகேயன் படத்திற்கு `பராசக்தி' என்ற தலைப்புதான் வைக்கப்பட இருக்கிறது என்பதும் திரைத்துறையில் பல மாதங்களாக உலவிக் கொண்டிந்த தகவல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனுமதி கடிதம் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
எனினும் மாலையில் சிவகார்த்திகேயன் படத்தலைப்பு பராசக்தி என அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், தெலுங்கில் தன் படத்திற்கு `பராசக்தி' என பெயரைப் பதிவு செய்திருந்த விஜய் ஆண்டனி, அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி அந்த தலைப்பு பதிவு செய்திருப்பது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பராசக்தி தலைப்பை பயன்படுத்துவதற்கான அனுமதியை, பராசக்தி படத்தை தயாரித்த ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்து, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்ற அனுமதி கடிதத்தை வெளியிட்டனர். அதில் தலைப்புக்கு அனுமதி தந்ததோடு, படக்குழுவினரை வாழ்த்தியும் இருந்தது ஏ வி எம் தரப்பு. அதனைத் தொடர்ந்து படத்தின் செகண்ட் லுக் மற்றும் தெலுங்கு டீசரும் வெளியிடப்பட்டது.
தங்கள் தரப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திலும் `பராசக்தி' தலைப்பை பதிவு செய்திருக்கும் ஆதாரத்தை வெளியிட்டனர் டான் பிக்சர்ஸ் தரப்பு. அதன் பின் சத்தமில்லாமல் இருக்க இன்று மதியம் 1.40க்கு டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன், விஜய் ஆண்டனி மற்றும் `சக்தித் திருமகன்' பட இயக்குநர் அருண் பிரபு ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதை விஜய் ஆண்டனியும் பகிர்ந்தார். இதை பார்த்ததும் இரு தரப்புக்கும் சமரசம் நடந்திருப்பது புரிந்தது. கூடவே அதை உறுதி செய்யும் விதமாக, இன்று மாலை 4 மணிக்கு சிவாவின் பராசக்தி பட புதிய போஸ்டரையும் வெளியிட்டனர். மேலும் இந்த தலைப்பு கிடைக்க உறுதுணையாக இருந்த ஏ.வி.எம் நிறுவனம், கருணாநிதி குடும்பம் மற்றும் சிவாஜி குடும்பம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கையை வெளியிட்டார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்.
இருக்கும் சிக்கல் என்ன?
இது குறித்து இயக்குநர் சுதா கொங்கராவும் நெகிழ்சசியான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். "2016ல் இதே போன்ற ஒரு ஜனவரி 29ம் தேதி, என் வாழ்க்கையில் மதிக்கும் `இறுதி சுற்று' படத்தை பார்வையாளர்களும், ஊடகத்தினரும் கொண்டாடினார்கள். என் வாழ்க்கையே மாறியது. நான் பலமுறை கூறியது போல, ஒருவேளை அப்படி நடந்திருக்காவிட்டால், அது எனக்கு இறுதி சுற்றாக அமைந்திருக்கும். அதே போன்ற அன்பை மீண்டும் இந்த பராசக்தி படத்திற்கும் அளித்திருக்கிறீர்கள். கண்டிப்பாக நல்ல படத்தை உங்களுக்கு கொடுப்பேன். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" எனப் பதிவிட்டிருந்தார் சுதா.
சரி இப்போது இந்த பிரச்சனை என்ன வித முடிவை எட்டியிருக்கிறது?
சிவகார்த்திகேயன் படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் `பராசக்தி' என்ற தலைப்பும், விஜய் ஆண்டனி படத்திற்கு தமிழில் `சக்தித் திருமகன்' என்றும் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் `பராசக்தி' என்றும் தலைப்பு வைத்துக் கொள்ளலாம் என பேசி முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதில் உள்ள ஒரு சிக்கல் என்ன என்றால், சிவாவின் பராசக்தி மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகாது என வைத்துக் கொள்வோம். ஆனால் நேரடி தமிழ் படமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பராசக்தி என்றேதான் வெளியாகும். அப்போது இந்த தலைப்பு பிரச்னை வராதா? என்ற கேள்வி இன்னும் தொடரத்தான் செய்கிறது. இதன் முடிவு என்ன என்பதை இனி வரும் காலங்களில் பார்ப்போம். இப்போதைக்கு இந்த பிரச்சனை இரு தரப்பிலும் சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் இன்றைய செய்தி.