கடல் சார்ந்த மர்மக் கதைக்களம்.. மிரட்டும் ஜிவி பிரகாஷின் ’கிங்ஸ்டன்’ டிரெய்லர்!
இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பேச்சுலர் படத்தில் சேர்ந்து நடித்த திவ்யா பாரதியும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் கிங்ஸ்டன். ஜிவி பிரகாஷின் 25வது படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஜிவி பிரகாஷ்-ன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் முதல் படமாக தயாரிக்கிறது. இப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் பின்னணி இசையையும் ஜிவி பிரகாஷே அமைத்துள்ளார்.
கடல் சார்ந்த ஃபேண்டஸி கதையை மையமாக கொண்டிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் டிரெய்லரை சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி முதலிய நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இயக்குநர் வெற்றிமாறனும் படம் சார்ந்து பாசிட்டிவான கருத்தை தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
டிரெய்லர் எப்படி இருக்கிறது?
கடல் சார்ந்த திரைக்கதை என்பதால், கடலோரம் இருக்கும் மீனவ கிராமத்திலிருந்து தொடங்குகிறது. கடலுக்குள் செல்பவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறப்பதும், சிலர் தற்கொலை செய்துகொண்டு இறப்பதும், திடீரென கிராமத்தில் தீப்பிடிப்பதும் என மர்மமான விசயங்கள் நடக்கிறது.
கிராமத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞராக ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். கிராமத்தில் நடக்கும் மர்மங்கள் குறித்து அறிய முன்படும் போது, ஒரு மர்மமான பின்னணி கதை ஜிவி பிரகாஷ் இடம் சொல்லப்படுகிறது. அதன்படி கடலுக்குள் செல்லவேண்டாம் என்ற அறிவுரையை ஒருவர் கூறுகிறார்.
ஒரு காட்சியில் சுடுகாட்டில் கிராம மக்கள் பேசுவதும், அப்போது ஒரு ஆத்மா குழிக்குள் துடிப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடலுக்குள் செல்லவேண்டாம் என சொல்லியும், ஜிவி பிரகாஷ் தன் வயதுடைய நபர்களை அழைத்துக்கொண்டு ஒரு குழுவாக கடலுக்குள் பயணிக்கிறார்.
கடலுக்குள் சென்றபிறகு ஏற்படும் மர்மங்களும், அதைச்சுற்றி நடக்கும் கதையென படம் மிரட்டலாக உருவாக்கப்பட்டிருப்பது டிர்யெலரில் தெளிவாக தெரிகிறது. கடலுக்குள் சென்றபிறகு படம் தியேட்டரில் எல்லோரையும் ஆட்கொள்ளப்போகிறது என்பது புரிகிறது. கடலுக்குள் சென்றபிறகு நடக்கும் மர்மமான வலையில் சிக்கி என்னாகிறது ஜிவிபிரகாஷ் உடன் பயணப்பட்ட குழு என்பது படத்தின்முடிவாக இருக்கப்போகிறது. டிரெய்லர் மொத்தத்தில் மிரட்டலாக கட் செய்யப்பட்டுள்ளது.என்ன