’A’ சான்றிதழ் கூலி படத்திற்கு சிக்கலா? குழந்தைகள் பார்க்காமல் எப்படி தடுப்பீர்கள்? எழும் கேள்விகள்!
ரஜினிகாந்த் நடிப்பில் கூலி நாளை வெளியாக இருக்கிறது. லோகேஷ் உடன் ரஜினி கை கோர்த்திருப்பதும், ஆமீர்கான், உபேந்திரா, நாகர்ஜூனா, சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இருப்பதும் என்று படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது படத்தில் இருக்கும் ஒரு சிக்கல் என்ன என்றால், படத்திலிருக்கும் அதிக வன்முறைக்காக சென்சார் கூலிக்கு வழங்கியுள்ள A சான்றிதழ்.
என்ன சிக்கல் உள்ளது?
36 ஆண்டுகளுக்கு முன் வெளியான சிவா படம் தான், கடைசியாக ரஜினி நடிப்பில் A சான்றிதழுடன் வெளியானது. ரஜினிகாந்த் படங்கள் என்றாலே பொதுவாக, குடும்பத்துடன் பார்வையாளர்கள் வருவார்கள் என்பதே வழக்கம். ஆனால் இந்த முறை கூலி A சான்றிதழ் பெற்றுள்ளதால், 18 வயதிற்கு குறைவானவர்கள் இப்படத்தை பார்க்க திரையரங்கில் அனுமதிக்கப்படமாட்டார்கள். சில ஹாலிவுட் படங்கள் A சான்றிதழ் பெற்று வெளியாகும் போது பல திரையரங்குகள், மிக தீவிரமாக 18 வயத்துக்குட்பட்டவர்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என சொல்வார்கள். இம்முறை ரிலீஸ் ஆவது ரஜினி படம் என்பதால், கண்டிப்பாக குடும்பத்தோடு வருவார்கள். எனவே குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என சொல்லும்படி பல திரையரங்குகள் ஒரு முன்னெடுப்பை கையில் எடுத்திருக்கிறது.
திரையரங்குகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூலி படம் A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே 18 வயதுக்கு குறைவானவர்கள், குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பை தெளிவாக பகிர்ந்துள்ளனர். மேலும் பல திரையரங்குகள், தங்களது வளாகங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தில் இரண்டு கேள்விகள் கண்டிப்பாக நமக்கு எழும். "ஒன்று குழந்தைகள் வரவில்லை என்றால், குடும்பமாக திரையரங்கு வருவது குறையும். இது படத்தின் வசூலை பாதிக்கும் தானே?", "இன்னொரு கேள்வி என்னதான் திரையரங்கில் 18 வயதுக்கு குறைவானவர்கள் படத்தை பார்க்கவில்லை என்றாலும், ஓடிடியில் இப்படம் வெளியாகும் போது பார்ப்பார்கள் தானே. அதனை எப்படி தணிக்கை செய்வார்கள்?."
இந்தக் கேள்விகளை இயக்குநரும், ஓடிடி நிறுவனருமான கேபிள் ஷங்கரிடம் முன்வைத்த போது, ”A சான்றிதழ் கொடுக்கப்பட்டதால கண்டிப்பா குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்காது. வயது வந்தவர்கள் கொண்டாடும் படமா தான் இருக்கும். ஆனா மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை தவிர, மற்ற திரையரங்குகள் அதை கடைபிடிப்பாங்களானு தெரியாது. ஒருவேளை 18 வயதுக்குள்ளானவர்களை அனுமதிச்சிட்டாங்கனா அதைவைத்தே படத்திற்கு நெகட்டிவான பிரச்னைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல சில்வர் ஸ்க்ரீன் தியேட்டர்களின் இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு குறைவுதான். இதனால படத்தின் வசூல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கு.
ஒருவேளை ஓடிடில வெளியாகும்போது குழந்தைகளோட பார்ப்பாங்கனா கண்டிப்பார் பார்ப்பாங்க. குழந்தைகளை விட பெற்றோர்களுக்கு தான் எதை குழந்தைகளுடன் பார்க்கவேண்டும், பார்க்க கூடாது என்ற சென்சார் அறிவு இல்லாமல் இருக்கிறது. காஞ்சனா படத்தையே குடும்பத்துடன் உக்கார்ந்து பார்க்கும் குடும்பங்கள் இருக்கின்றன. ரஜினியும், சிவகார்த்திகேயனும் நடிச்சா குடும்பத்தோட பார்க்கலாம்ன்ற டெம்ப்ளேட் ஒன்னு இருக்கு. சென்சார் போர்டை விட ஓடிடியில் சில நிறுவனங்கள் அதை சரியாக கடைப்பிடிக்கிறார்கள். ஜெயிலர் படத்திற்கு U/A சான்றிதழ் தான் வழங்கப்பட்டது, ஆனால் அமேசான் பிரைமில் A சான்றிதழ் என்றுதான் வைத்துள்ளனர்.
இறுதியில் குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும், பார்க்க கூடாதுனு முடிவுபன்றது குடும்பங்கள் தான்” என்று பேசியுள்ளார்.