"ஜார்ஜ் குட்டி ஒரு கிரிமினல் அல்ல" - மோகன்லால் | Mohanlal | Drishyam 3
மோகன்லால், மீனா, ஆஷா சரத் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள `த்ரிஷ்யம் 3' படம் மே 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு கொச்சியில் நடைபெற்றது. இதில் செய்தியாளர் ஒருவர் " ‘த்ரிஷ்யம்’ பார்த்து இதுபோன்ற கிரிமினல் விஷயங்களைச் செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது அதனை எப்படிப் பார்க்கிறீர்கள்’’ என மோகன்லாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அந்தச் செய்தியாளரிடமே, "நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்" என்றார் மோகன்லால். அதற்குச் செய்தியாளர், "கிரிமினல் மைண்ட் இருப்பவர்கள் அப்படி யோசிப்பார்கள்" எனக் கூறினார். பின்னர் பதிலளித்த மோகன்லால், "அதுதான் விஷயம். ஜார்ஜ் குட்டி ஒரு கிரிமினல் அல்ல. நான் அவரை ஒருபோதும் அப்படி பார்த்ததில்லை. இது ஒரு சினிமா, அதனை நம்பும்படி கொடுக்க வேண்டும். 10 - 20 வருடங்கள் கழித்துகூட, அவர் பிடிக்கப்படலாம். போலீசை அப்படி எல்லாம் ஏமாற்றிட முடியாது. சினிமாவால் அப்படி நடக்கும் எனச் சொல்ல முடியாது. இதில் அவர் எந்த மோசமான விஷயமும் செய்யவில்லை. வெறுமனே தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற அவர் முயற்சிக்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஜார்ஜ் குட்டி எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை.
அவர் செய்தது அதிர்ஷ்டவசமாகச் சரியானதாக மாறியது. அவர் மாட்டிக் கொள்ளக்கூட வாய்ப்பிருந்தது. இருந்தும் முயன்றார், அது வெற்றிகரமாக நடந்தது. ’த்ரிஷ்யம்’ வருவதற்கு முன்னும் இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஒரு வீட்டில் கொலை நடந்தால், அந்த வீட்டின் செப்டிக் டேங்கை திறந்து பார்ப்பார்கள், அதில்தான் சடலம் இருக்கும்.
’த்ரிஷ்யம்’ படம் பார்த்துவிட்டு அப்படியாகச் சிந்திப்பது சரி அல்ல. ஏனென்றால், சினிமா மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம், அப்படத்தில் உள்ள மற்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார்.

