சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்... பிரகாஷ் ராஜ் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு!
சமூக ஊடகங்களில் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக கூறி பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா, உள்ளிட்ட 19 பேர் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளிக்க பிரகாஷ் ராஜ், பிரணீதா, நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பாப் அப் வடிவில் தோன்றும் தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலி விளம்பரங்களில் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தோன்றுவதாக அளிக்கப்பட்ட புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ செய்தியில், கடந்த 2016 ஜூன் மாதம் சூதாட்டத்திற்கு தான் விளம்பரம் செய்ததாகவும், அது தவறு என்பதை, அடுத்த சில மாதங்களிலேயே தான் உணர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த விளம்பரத்திற்கான ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு மட்டும் செய்யப்பட்டதால், தன்னால் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை எனத் தெரிவித்த அவர், அதைத்தொடர்ந்து, கடந்த 9 ஆண்டுகளாக அதுபோன்ற விளம்பரத்தை தான் செய்யவில்லை என்றும் கூறினார். மேலும், சூதாட்டத்திற்கு அடிமையாகக்கூடாது என்று அறிவுறுத்திய அவர், அது உயிரை பறித்துவிடும் என்று இளைஞர்களுக்கு எச்சரித்தார்.