மொத்தமாக சறுக்கிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள்.. விடாமுயற்சி முதல் கூலி வரை., என்ன பிரச்னை?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `கூலி' வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், படத்திற்கு வரும் கலவையான விமர்சனங்கள், படத்தில் இருக்கும் குறைகள் பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். ரஜினி போன்ற ஒரு உச்ச நட்சத்திரம் நடிக்கும் படத்தின் கதையில் ஏன் இத்தனை குறைகள் என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது.
இந்த வகையில் 2025ல் வெளியான பெரிய ஹீரோக்கள் படங்களில் எல்லாமே இந்தப் பிரச்சனை இருந்ததை கவனிக்க முடியும். அது என்னென்ன படங்கள், என்ன பிரச்சனைகள் என்பதை பார்க்கலாம்...
விடாமுயற்சி
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான பெரிய படம் அஜித்குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான `விடாமுயற்சி'. Breakdown படத்தினை தழுவி, தமிழுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதையை உருவாக்கி இருந்தார் மகிழ்.
அஜித்தை விவாகரத்து செய்ய முடிவெடுக்கும் த்ரிஷா, தன் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்கிறார். த்ரிஷாவை வீட்டில் ட்ராப் செய்ய அவருடன் பயணப்படுகிறார் அஜித். இப்பயணத்தில் த்ரிஷா மர்மமான முறையில் கடத்தப்பட, அவரை அஜித் எப்படி மீட்கிறார் என்பதே கதை. திருமணத்தை தாண்டிய உறவு, விவாகரத்து, போன்ற விஷயங்களை மாஸ் ஹீரோ படத்தில் பேசியது கவனிக்க வைத்தாலும், ஒரு படமாக சுவாரஸ்யம் ஏதும் இல்லை. அஜித் ரசிகர்களுக்கே திருப்தி அளிக்காத படமாக எஞ்சியது விடாமுயற்சி.
குட் பேட் அக்லி
இதனையடுத்தது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான `குட் பேட் அக்லி' வெளியானது. அஜித்தின் பழைய படங்களின் ரெஃபரன்ஸ், ஸ்டைலிஷான அஜித், மேலும் ஜான்விக், டாங்லி என பல விஷயங்களை சேர்த்து படத்தை கொடுத்திருந்தார் ஆதிக்.
பல நாட்கள் கழித்து அஜித்தை ஃபிரெஷ்ஷாக காட்டியதும் ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. படமும் மிகப்பெரிய ஹிட். ஆனால் விமர்சன ரீதியில், படத்தின் எழுத்து வெறுமனே அஜித்தின் பழைய பட ரெஃபரன்ஸ், வின்டேஜ் பாடல்களை மட்டுமே நம்பி இருக்கிறது எனக் குறிப்பிட்டனர். வசூலில் சாதித்தாலும் அஜித் ரசிகர்கள் தாண்டி யாரையும் கவரவில்லை `குட் பேட் அக்லி'.
ரெட்ரோ
அடுத்து வெளியான கவனிக்கத்தக்க படம் `ரெட்ரோ'. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான இப்படத்தின் டீசர் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. ஒரு கேங்ஸ்டர் கதை.
அடிமைப்பட்டு இருக்கும் மக்களின் விடுதலை, ரப்பர் கல்ட் என பல விஷயங்கள் இருந்தும் அது சுவாரஸ்யமாக சொல்லப்படாதது படத்திற்கு மைனஸாக அமைந்தது. ஏற்கனவே சூர்யாவின் `எதற்கும் துணிந்தவன்', `கங்குவா' என இரு படங்களும் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்த நிலையில், அந்தப் பட்டியலில் ரெட்ரோ'வும் இணைந்தது.
தக் லைஃப்
அடுத்து வெளியானதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியான `தக் லைஃப்'.
நாயகன் படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் இணைந்தது கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி. சிம்பு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என பல சிறப்புகள். இருந்தும் ஒரு படமாக மக்களை கவர தவறியது.படத்தில் இருந்த குறைகளுக்காக அதிக அளவில் இணையத்தில் கேலிக்கும் ஆளானது `தக் லைஃப்'.
இவ்வருடம் விஜய் நடிப்பில் படம் ஏதும் இல்லை என்றாலும், கடைசியாக அவர் நடிப்பில் வந்த GOAT படத்திற்கும் இதே நிலைமைதான். வசூலாக படம் வெற்றியடைந்தால், படமாக ரசிகர்களை கவர தவறியது.
உச்ச நடிகர்களின் படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், பல நல்ல கதைக்களங்களுடன் வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததையும் நாம் கவனிக்க வேண்டும். ராஜேஷ் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த `குடும்பஸ்தன்', அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடித்த `டிராகன்', அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த `டூரிஸ்ட் ஃபேமிலி', கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட் நடித்த `மெட்ராஸ் மேட்னி', ராம் இயக்கத்தில் சிவா நடித்த `பறந்து போ' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவ்வளவு ஏன் ரிலீஸே ஆகாது என நினைத்த `மத கஜ ராஜா' கூட வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். படத்தின் வசூலுக்கு வேண்டுமானால் ஸ்டார்கள் தேவைப்படலாம். ஆனால் மக்களிடம் வரவேற்பு கிடைக்க நல்ல கதைக்களமோ அல்லது பொழுதுபோக்கு அம்சமோ படத்தில் இருக்க வேண்டும். அதுதான் நாம் முன்பு பார்த்த படங்களில் மிஸ்ஸிங்.