எம்புரான் சர்ச்சை| ’எனது மகனை பலிகடாவாக்க முயற்சி ’ - நடிகர் பிரித்விராஜ் தாயார் பரபரப்பு அறிக்கை!
எம்புரான் பட சர்ச்சையில் தனது மகனை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாக நடிகரும், படத்தின் இயக்குநருமான பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாறன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காட்சிகளை நீக்குவதற்காக, பிரித்விராஜ் இயக்கியுள்ள எம்புரான் திரைப்படம் 17 காட்சி நீக்கங்களுடன் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியிலும் படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்திருந்தார். ஒரு புறம் எம்புரான் சர்சைக்கு மத்தியில் சிக்கியிருந்தாலும், மறுபுறம் எம்புரான் படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் படத்தின் இயக்குநரான பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாறன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,எம்புரான் பட சர்ச்சையில் தனது மகனை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இது ஒரு தாயின் வலி. இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை பார்த்து என்னை கேலி செய்வதால் அதில் அர்த்தமில்லை. மோகன்லாலோ அல்லது தயாரிப்பாளர்களோ பிருத்விராஜ் தங்களை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லவில்லை. அவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன். மோகன்லால் என் தம்பியைப் போன்றவர். லாலை சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரியும்.
மோகன்லால் என் மகனை பலமுறை புகழ்ந்து பேசியுள்ளார். ஆனால், லாலுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ தெரியாமல் சிலர் என் மகனைப் பலிகடாவாக்க முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தப் படத்துடனோ அல்லது எந்தப் படத்துடனோ தொடர்புடைய யாரையும் இயக்குனர் பிருத்விராஜ் ஏமாற்றவில்லை. அவர் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டார்.
எம்புரான் படத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், எம்புரான் படக்குழுவினர் அனைவரும் அதற்குப் பொறுப்பு. அவர்கள் அனைவரும் ஒன்றாக ஸ்கிரிப்டைப் படித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தார்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
படப்பிடிப்பின் போது காட்சிகளைத் திருத்த வேண்டியிருக்கும்பட்சத்தில், எழுத்தாளர் முரளி கோபி எப்போதும் அவ்வாறு செய்யத் தயாராக இருந்தார். இப்படி எல்லாம் இறுதி செய்யப்பட்டு படம் வெளியானபட்சத்தில் பிருத்விராஜ் மட்டும் எப்படி அதற்குப் பொறுப்பேற்க முடியும்?.
நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எம்பூரானில் அவர்கள் இருவருக்கும் (மோகன்லால் அல்லது தயாரிப்பாளர்களுக்கு) தெரியாத ஒரு ஷாட் கூட இல்லை . இந்த படத்தில் மோகன்லாலுக்கு தெரியாதது என எதுவுமில்லை. அவர்களில் இருவருமே படத்தில் உள்ள எதையும் பற்றி தங்களுக்கு தெரியாது என்று சொல்ல மாட்டார்கள்.
எல்லா அரசியல் கட்சிகளிலும் அமைப்புகளிலும் உள்ளவர்களை அன்புடனும் மரியாதையுடனும் மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட சிலர் கடந்த சில நாட்களாக பிரித்விராஜை தனிமையில் தாக்கி வருகின்றனர். இதற்குப் பின்னால் சில திரைப்படத் தயாரிப்பாளர்களும் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அரசியலின் பெயரைப் பயன்படுத்தி அதிகார மையங்களிடமிருந்தோ அல்லது அமைப்புகளிடமிருந்தோ எந்தப் பதவிகளையோ அல்லது அங்கீகாரத்தையோ கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியம் எனக்கோ அல்லது என் குழந்தைகளுக்கோ இல்லை.
அதுபோன்ற ஒன்று நடப்பதைத் தடுக்க இந்த வழியில் இது தொடரப்பட்டால், நான் அவர்களிடம் இதைச் சொல்கிறேன். பிரித்விராஜின் தந்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது இறந்துவிட்டார். என் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லித்தான் வளர்த்தேன். நாங்கள் அரசியலை நம்பி வாழும் மக்கள் அல்ல. நாங்கள் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். அரசியல் சூழ்நிலைகளின் அழுத்தம் காரணமாக, இந்தத் தலைவர்களில் சிலர் தங்கள் கருத்துக்களை மாற்ற வேண்டியிருக்கலாம். ஆனால் அவரது கருத்துக்களையும் மதிக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.