அமெரிக்காவில் ஹிட்டடித்த 'Dorothy'.. சர்ச்சை, பாராட்டுக்கு மத்தியில் வசூல் நிலவரம் என்ன?
அமெரிக்காவில் நல்ல வரவேற்பு பெற்ற 'டோரதி' திரைப்படம், இந்தியாவில் எதிர்ப்புகள் மற்றும் பாராட்டுகளுக்கு மத்தியில் நல்ல வசூலை கண்டுள்ளது. சமூகத்தில் திருநங்கையின் போராட்டத்தை மையமாக கொண்ட இப்படம், தினசரி வசூலில் ஏற்றம்-இறக்கத்துடன் தொடர்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு, அனுராக் காஷ்யப், தனுஷிடமிருந்து வந்த பாசிட்டிவ் ரிவ்யூ மற்றும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த மிரட்டல் பாடல்கள் என மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் டோரதி வெளியானது.
ரசிகர்கள் சுப்ரமணியபுரம் போலான திரைப்படம் என்ற எதிர்ப்பார்ப்பில் சென்றநிலையில், டோரதி திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை மையமாக பேசியுள்ளது டோரதி. முடிவில் தனக்குள் இருக்கும் பெண்மையை சமூகத்திற்காக அடக்கிவைக்காமல் சுதந்திர பறவையாக ‘திருநங்கையாக’ மாறுவதும், சிறுவயது நண்பனை இறுதியில் காதலனாக கைக்கோர்ப்பதுமாக படம் முடிகிறது.
இப்படத்தில் வைக்கப்பட்ட ஒரு வசனமும், இறுதி முத்தக்காட்சியும் சில ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், மிஷ்கின், மணிரத்னம், சூர்யா, விஜய் ஆண்டனி போன்ற திரைப்பிரபலங்கள் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
இந்தசூழலில் எதிர்ப்பு-வரவேற்பு என சென்றுகொண்டிருக்கும் டோரதி படத்தின் வசூல், தொடக்க 3 நாளில் மொத்தமாக 4 கோடிவரை இருந்தது. ஆனால் அதற்குபிறகு ஒவ்வொரு நாளும் ஒருகோடிக்கு குறைவான வசூலையே பெற்றுவருகிறது. sacnilk.com அப்டேட்டின் படி படம் 7 நாளில் இந்தியாவில் மொத்தமாக 7.91 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால் தினசரி வசூலும், டிக்கெட் முன்பதிவும் ஏற்றம் இறக்கத்துடன் இருந்துவருகிறது. கடைசி நாளில் ஒருகோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது திரைப்படம்.
அதேநேரம் வட அமெரிக்காவில் டோரதி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அங்கு டிக்கெட் விற்பனை அதிகரித்துவரும் சூழலில், இதுவரை 1.70 கோடி வரை அங்கு படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தசூழலில் இந்தவார இறுதியில் மீண்டும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு காத்திருக்கின்றனர்.

